சென்னை:

பெசன்ட் நகரில் ஒரு குப்பைத் தொட்டியில் ரூ.11.89 லட்சம் (இந்திய மதிப்பில்) இலங்கை பணம் கண்டெடுத்ததாக துப்புரவு தொழிலாளி ஒருவர் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் உமா. மாநகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக உள்ள இவர், பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை சேகரிக்க முயன்றபோது ஒரு பையில் கட்டுகட்டாக இலங்கை நாட்டு பணத்தை கண்டெடுத்தார். பின்னர் அதை எடுத்துக் கொண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த பணத்தை ஆய்வு செய்த போலீஸார் இந்திய மதிப்பில் ரூ.11.89 லட்சம் உள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.