fbpx
Connect with us

Cinemapettai

ரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்

India | இந்தியா

ரூ.10 லட்சம் தேவை.. எங்களைச் சுடுங்கள்: கொந்தளிக்கும் ஐ.டி. ஊழியர்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன.

தூத்துக்குடி வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை தொடங்கப்பட்டது முதலே சர்ச்சைகளுக்குக் குறைவில்லை என்றே கூறலாம். ஆலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் 100 கோடி ரூபாய் அபராதம் கட்டிய பின்னரே, அந்த ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆலையை மூடக்கோரி பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், தூத்துக்குடியை அடுத்த குமரெட்டியாபுரம் மக்கள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

அந்த கிராமத்தை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதனால், தூத்துக்குடி மாவட்டம் பரபரப்பானது. இந்த போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்த எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

போராட்டத்தின் 100வது நாளை ஒட்டி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அவசர அவசரமாக பாதுகாப்புக் கோரி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆலைக்கு உரிய பாதுகாப்பைக் கொடுக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை காவல்துறை எப்படி புரிந்துகொண்டதோ தெரியவில்லை. அதேபோல், தூத்துக்குடியின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் அவசரகதியில் பிறப்பித்தார்.

இவையனைத்தும் மக்களின் போராட்டம் நடந்துவிடக் கூடாது என அரசு சிந்தித்ததின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. சம்பவ நாளான கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகக் கிளம்பிய மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரினர். ஆனால், போலீசார் அனுமதி மறுக்கவே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார், ஸ்நைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் முதல் நாளில் 9 பேர் உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கைப் படிப்படியாக உயர்ந்து தற்போது 13ல் வந்து நிற்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாழ்வாதாரப் பிரச்சனைக்காகப் போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலாகி விட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்துக்கும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, `ரூ.10 லட்சம் எங்களுக்கு வேண்டும். எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்’, தூத்துக்குடி மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்’’போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியபடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top