பெண் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்தின் மூலம் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி  பெற்றது.

ஐ.பி.எல்  பத்தாவது சீசனின் 39வது லீக் போட்டியில் புனே அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மெக்கல்லம் 45 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறவே 19.5 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருந்தபோது குஜராத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு பெரும் அதிர்ச்சியாக முதல் ஓவரிலியே ரஹானே மற்றும் ஸ்மித் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய மனோஜ் திவாரி(0), த்ரிப்பதி(6) ரன்களில் விக்கெட்டை  இழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த தோனி – ஸ்டோக்ஸ் கூட்டணி குஜராத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.

26 ரன்கள் எடுத்திருந்தபோது தோனி விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டோக்ஸ் 61 பந்துகளுக்கு 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஐ.பி.எல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்தார்.