பெங்களூர்: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளார்.

ஐபிஎல் சீசன் தற்போது 10வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த பத்து சீசனிலும் பல வீரர்கள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால் அனைத்து தொடரிலும் அபாரமாக ஆடியது ஒரு சிலரேதான்.

இப்படி பத்து சீசனிலும் பக்காவாக ஆடிய வீரர்களில் ஒருவர்தான் ரோகித் ஷர்மா. ஒவ்வொரு சீசனிலும் தலா 300க்கும் மேல் ரன்களை குவித்துள்ளார் இவர். முன்னதாக ரெய்னா மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தார்.

நாலாயிரம் ரன்கள்

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா, ஐபிஎல் தொடரில் 4000 ரன்களை கடந்துள்ளார். நேற்றைய குவாலிபையர்-2 ஆட்டத்தில் இதை அவர் சாதித்தார்.

ரெய்னா, கோஹ்லி வரிசையில்

நாலாயிரம் ரன்களை கடந்த வீரர்களான ரெய்னா, கோஹ்லி மற்றும் கம்பீரையடுத்து, ரோகித் ஷர்மா இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். இதில் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்கான இந்திய அணியில் கோஹ்லியும், ரோகித்தும் மட்டும் இடம் பிடித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

மீண்டு வந்தார்

காயத்தால், சுமார் ஆறு மாதகாலத்திற்கு பிறகு கிரிக்கெட் உலகில் மீண்டும் வந்த ரோகித் ஷர்மா, இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அரை சதம் கடந்துள்ளார். 39 பந்துகளில் 58 ரன்களை புனே அணிக்கு எதிராக அவர் எடுத்தார்.

ஓப்பனிங்கில் ஆசை

வழக்கமாக ஓப்பனிங்கில் இறங்கும் ரோகித் ஷர்மா, இந்த தொடரில் 4வது இடத்தில் களமிறங்கி வருகிறார். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி களமிறங்குவதாக அவர் கூறியுள்ளார். தனக்கு ஓப்பனிங்கில் இறங்கத்தான் விருப்பம் என்கிறார் அவர்.