Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

அடையார் இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை! சென்னையில் பரபரப்பு..

நம்ம நாட்டில் சினிமா படங்களை மிஞ்சும் அளவுக்கு கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. சில வருடம் முன்பு திருடர்கள் கொள்ளை அடித்து சென்றபொழுது போலிசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இப்ப மறுபடியும் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

அடையாறில் இந்தியன் வங்கியில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி 6 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து தப்பியோடினார். அவரைப் பொதுமக்கள், போக்குவரத்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். சென்னை அடையாறு, இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு எந்நேரமும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதும். இன்று வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கியில் குவிந்திருந்தனர். வங்கி ஊழியர்களும் மும்முரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமாநில இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கியைக் காட்டி வங்கி காசாளரிடம் பணத்தை தரும்படி கேட்டுள்ளார். சத்தம் போட்டால் சுட்டுவிடுவேன் என்று அவர் எச்சரித்ததைக் கண்டு பயந்த காசாளர் தனது டேபிளில் இருந்த ரூ. 6 லட்சத்தை எடுத்து அந்த இளைஞரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் வெளியே வந்த அந்த இளைஞர் துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை மிரட்டியுள்ளார். அவரிடம் இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் இருந்தன. இரண்டு துப்பாக்கிகளையும் காட்டி மிரட்டியபடி வெளியே வந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது அவரது துப்பாக்கி பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதை அங்கிருந்த போக்குவரது உதவி ஆய்வாளர்கள், போலீஸார் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் கொள்ளையனை வளைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் கொள்ளையன் கையில் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அதையும் மீறி துணிச்சலாக போக்குவரத்து போலீஸார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த இரண்டு துப்பாக்கிகள், கொள்ளையடிக்கப்பட்ட 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த முயற்சியில் பொதுமக்கள் ஆத்திரமடைந்து கொள்ளையனைத் தாக்கியதில் அவர் லேசாக காயமடைந்தார். உடனடியாக அவரை அடையாறு காவல் நிலைய போக்குவரத்து போலீஸாரே ஆட்டோவில் ஏற்றி கொண்டுசென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் பெயர் சுனிப் யாதவ் (30) பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சென்னையில் கேளம்பாக்கத்தில் தற்போது வசித்து வருவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் துப்பாக்கி முனையில் துணிச்சலாகப் பணத்தைக் கொள்ளையடித்த செயலில் சுனிப் யாதவ் தவிர வேறு நபர்களும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். துப்பாக்கியை யாரிடமிருந்து வாங்கினார், பின்னனியில் உள்ளவர்கள் யார் என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அடையாறு வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்த அதிர்ச்சியிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள் மீளவில்லை. கொள்ளையனைத் துணிச்சலாகப் பிடித்த போக்குவரத்து போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top