திருச்சி மாவட்டத்தில் மதுபோதையில் விழுந்து கிடந்த பள்ளி மாணவர்களைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரதியார் நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் படிக்கும் இரண்டு பேர், பள்ளி நேரத்தில் வெளியில் சென்று மது அருந்திவிட்டு, போதையில் பள்ளி அருகிலேயே விழுந்து கிடந்தனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவர்கள் மது போதையில் விழுந்து கிடந்ததையறிந்த அப்பகுதி மக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே மதுக்கடைக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், பள்ளி அருகிலேயே மாணவர்கள் மது அருந்திவிட்டு விழுந்து கிடந்தது பார்ப்பவர்களை வேதனை அடைய வைத்துள்ளது.