உகாண்டாவில், திருமணம் செய்துகொள்ளாமல் கருத்தரிக்கும் பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டுவருவதாக பார்க்கப்பட்டனர்.

எனவே, அத்தகைய பெண்களை தனியானதொரு தீவுக்கு கொண்டுசென்று அங்கு இறந்துபோக விட்டுவிடுவார்கள். அதில் அதிர்ஷ்டசாலிகளான பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அப்படி மீட்கப்பட்ட ஒருவர் இன்றும் உயிர் வாழ்கிறார். அவர் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில்

“நான் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்ததை அறிந்து கொண்ட என்னுடைய குடும்பத்தார், ஒரு படகில் என்னை ஏற்றி, அகாம்பேனேவுக்கு (தண்டனை தீவு) கொண்டு சென்றனர். நான்கு நாட்கள் உணவும், குடிநீரும் இன்றி அங்கேயே இருந்தேன்” என்கிறார் மௌடா கயிதாராகாபிவி. அப்போது வயது 12.

“நான் மிகவும் பசியோடு, குளிரோடு இருந்ததை இப்போதும் நினைவுகூர்கிறேன். நான் ஏறக்குறைய செத்து கொண்டிருந்தேன்”.

5ஆம் நாள் அங்கு வந்த மீனவர் ஒருவர், என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

“நான் நம்பவில்லை. என்னை எமாற்றி, தண்ணீரில் தள்ளிவிடதானே அழைக்கிறீர்கள்” என்று நான் அவரிடம் கேட்டேன்”.

மீட்ட கணவர்

“ஆனால், உன்னை என்னுடைய மனைவியாக்கி கொள்ள அழைத்து செல்வதாக கூறி, என்னை இங்கு கொண்டு வந்தார்” என்று மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார் அவருடைய கணவரோடு வாழ்ந்த வீட்டின் வராந்தாவில் எளிமையான நாற்காலியில் உட்கார்ந்திருந்த மௌடா கயிதாராகாபிவி.

தண்டனை தீவில் இருந்து புன்யான்னி ஏரிக்கு குறுக்கே 10 நிமிட படகு சவாரி செய்தால் வந்தடைகின்ற தொலைவில் இருக்கின்ற காஷூங்யிரா கிராமத்தில் அவர் வாழ்ந்து வருகிறார். இந்த தண்டனை தீவு நீரால் சூழப்பட்ட புற்கள் நிறைந்திருக்கும் பகுதியாகும்.

தொடக்கத்தில், அவருடைய பேரனும், சுற்றுலா வழிகாட்டியுமான டைசன் நடாம்விசிகா பிபிசி செய்தியாளர் உள்ளூர் ருகியா மொழியில் பேசியதாக தெரிவித்தது வரை, பேசியன்ஸ் அதுஹைரேயை எப்படி வாழ்த்த வேண்டும் என்று அறியாமல் மௌடா கயிதாராகாபிவி குழம்பியிருந்தார்.

அவருடைய முகம் பல் தெரியாத அளவுக்கு புன்னகை பூத்தது. அவர் என்னுடைய கையை இறுகப்பற்றி கொண்டார். நீண்டகாலம் நிலைக்க வேண்டும் என்ற உறவினர்களைதான் பாகியா மக்கள் இவ்வாறு இறுகப்பற்றி கொள்வது வழக்கம்.

ஒல்லியான உடல் கட்டுடைய மௌடா கயிதாராகாபிவி நேர்த்தியாக காலடிகளை எடுத்து வைத்து நடக்கிறார். அவர் 80 வயதுகளில் இருப்பதாக மதிப்பிடலாம். ஆனால் அவருடைய குடும்பத்தினரோ அவர் அதைவிட வயதானவர் என்று நம்புகின்றனர்.

உகாண்டாவில் பிறப்பு சான்றிதழ்கள் பரவலாகாத நேரத்தில் அவர் பிறந்தார். எனவே, அவருடைய வயதை உறுதி செய்ய முடியவில்லை.

1962 ஆம் ஆண்டு உகாண்டா சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னதாக வழங்கப்பட்ட வாக்காளர் பதிவை அவர் வைத்திருக்கிறார். அதனை வைத்து அவருடைய வயதை நாங்கள் பின்னோக்கி கணக்கிட்டு கொள்கிறோம். அவருக்கு ஏறக்குறைய 106 வயது இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று நடாம்விசிகா தெரிவிக்கிறார்.

 

ஆண் வரதட்சனை வழங்கும் முறை

 

பாரம்பரிய பாகியா சமூகத்தில், திருமணத்திற்கு பின்னர் தான் ஒரு பெண் கருத்தரிக்க வேண்டும். கன்னி கழியாத பெண்ணை திருமணம் செய்வது என்றால், அதற்கு மணமகன் பெரும் பரிசு வழங்க வேண்டும். இந்த பரிசு பொதுவாக கால்நடைகளாக மணப்பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துக்கொண்ட திரை பிரபலங்கள்!!

திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்துள்ள பெண், குடும்பத்திற்கு அவமானத்தை கொண்டு வருவதாக மட்டுமே பார்க்கப்படவில்லை. தேவையான அதிக செல்வத்தையும் எடுத்து சென்றுவிடுபவராக பார்க்கப்பட்டார்.

தங்களுடைய குடும்பத்திற்கு வருகின்ற அவமானத்தை தவிர்ப்பதற்காக, திருமணம் ஆகாமல் கர்ப்பம் அடைந்த பெண்களை தண்டனை தீவில் எதுவுமே கிடைக்காமல் இறந்துபோவதற்கு கட்டாயமாக கொண்டு விட்டுவிடுவது அன்றைய வழக்கமாக இருந்தது.

அந்த இடம் மிகவும் வெகுதொலைவில் இருந்ததால், மறைப்பரப்பாளர்கள் மற்றும் காலனி ஆட்சியாளர்கள் உகாண்டாவிற்கு வந்த பின்னரும் இந்த வழக்கம் தொடர்ந்துள்ளது.

அந்நேரத்திலுள்ள பலருக்கும், குறிப்பாக பெண்களுக்கு, தண்ணீரில் நீந்துவது எவ்வாறு என்று தெரியாது. எனவே ஒரு இளம் பெண் அந்த தண்டனை தீவில் கொண்டுவிடப்பட்டால், இரண்டு தெரிவுகள்தான் அவர் முன்னால் இருக்கும். ஒன்று, தண்ணீரில் குதிப்பது. இன்னொன்று, நீரில் மூழ்கி சாவது அல்லது குளிராலும், பசியாலும் துன்புற்று இறப்பது.

தண்டனை தீவில் விடப்பட்டபோது மௌடா கயிதாராகாபிவி பயந்தாரா? என்று பிபிசி செய்தியாளர் கேட்க, தலையை ஒரு பக்கமாக சரித்து, முகத்தை சுழித்து கொண்டு, திருப்பி அவர் கேள்வி கணை தொடுக்கிறார்.

“நீங்கள் 12 வயதாக இருந்து, யாருமே வாழாத, ஏரிக்கு மத்தியிலுள்ள ஒரு தீவில் உங்களை கொண்டு விட்டால், நீங்கள் பயப்பட மாட்டீர்களா?” என்றாரே பாக்கலாம்.

பாறை முகட்டில் இருந்து தள்ளிவிடுவது

தற்போது ருகுன்கிரி மாவட்டமாக அறியப்படும் இந்த பிராந்தியத்தின் இன்னொரு பகுதியில், கிசிஸி நீர்வீழ்ச்சியின் செங்குத்து பாறை முகட்டிலிருந்து திருமணம் ஆகாமல் கருத்தரித்த பெண்களை தூக்கி வீசிவிடுவது பழக்கமாக இருந்து வந்துள்ளது.

அதில் பெண்ணொருவர், தன்னை தள்ளிவிட்ட சகோதரனையும் பிடித்து இழுத்து இருவரும் விழுந்து இறந்த பின்னர் இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாக ஒரு கதை உள்ளது.

கிசிஸி நீர்வீழ்ச்சியில் விழுந்தோர் யாரும் பிழைக்கவில்லை. ஆனால், இந்த தண்டனை தீவிலிருந்து பல பெண்கள் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. மணமகளுக்கு பெரும் பரிசு வழங்க முடியாத நிலையில் இருந்த இளம் ஆண்களுக்குதான் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

இந்த தீவிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வது என்பது ஆண் வரதட்சணை கொடுக்காமல் மனைவியை பெறுவதாக பொருள்படும்.

கிராமத்தில் வீண்பேச்சு

தண்டனை தீவில் இருந்து காஷூங்யிரா கிராமத்திற்கு அவருடைய கணவர் அழைத்து வந்த பின்னர், மௌடா கயிதாராகாபிவி அவரை பற்றி தெரிந்துகொள்ள விரும்பிய பலரின் ஆர்வத்திற்கும், வீண்பேச்சுக்கும் ஆளானார்.

காலம் செல்லச் செல்ல, அவர் சுற்றுலா பயணிகளால் கவரப்படும் நபரானார். அந்த பகுதியில் வழங்கப்பட்ட தண்டனையின் வரலாற்றை அறிவிப்பதாக அவருடைய வீடு சுற்றுலா பயணிகள் வழக்கமாக நின்று செல்லும் இடமாகியது.

தன்னுடைய வாழ்க்கை கதையை விளக்குகிறபோது, அவர் அவ்வப்போது நிறுத்தி, தன்னுடைய கைகளை, சிந்திப்பதுபோல பார்த்தார்.

பிற நேரங்களில், அவர் எவ்வாறு தன்னுடைய கண்ணை இழந்தார் என்று கேட்டபோது, தன்னுடைய கண்ணை தொட்டு பார்த்த பின்னர், அதற்கு பதிலழிப்பதை தட்டிக்கழித்தார்.

அவர் இறந்து போவதற்கு அந்த தீவில் விடப்பட்ட பின்னர், வயிற்றில் இருந்த குழந்தைக்கு என்ன ஆயிற்று? என்ற கேள்வி அவருக்கு மிக கடுமையான ஒன்றாக இருந்தது.

அதிகம் படித்தவை:  செக்க சிவந்த வானம் படத்தின் பேக் டு பேக் ப்ரோமோ விடியோக்கள் !

“அந்த கருத்தரிப்பு மிகவும் ஆரம்ப நிலை தான். அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை. அதற்காக திரும்ப சென்று நம்மை நியாயப்படுத்தி கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் அடித்து தொலைத்து விடுவார்கள்” என்று அவர் கூறினார்.

அவர் அதனை நேரடியாக சொல்லவில்லை என்றாலும், அவர் அடிக்கப்பட்டதால், கருச்சிதைவு ஏற்பட்டு அந்த குழந்தை பிறக்கவில்லை.

தண்டனை பெண்கள்

“தண்டனை பெண்கள்” (இது உள்ளூர் மொழியில் “ஒகுஹனா” என்று அறியப்படுகிறது. இதில் இருந்து தான் இந்த தீவு தன்னுடைய உள்ளூர் பெயரான அகாம்பேனே என்றாகிறது) என்பது மிகவும் பழைய நடைமுறை.

இதனால் தான் மௌடா கயிதாராகாபிவி கருத்தரிப்பதன் விளைவுகளை பற்றி அறிய வந்திருப்பார்.

“எனக்கு நெருங்கியவராக யாரும் இருக்கவில்லை என்றாலும், தண்டனை தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிற பெண்களை பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். நான் பெரும்பாலும் சாத்தானால் சோதிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது” என்று கூறிவிட்டு உள்ளூர சிரிக்கிறார்.

இத்தகைய சாத்தானின் பாதைக்கு தன்னை அழைத்து சென்ற அந்த நபரை அவர் பார்க்கவும் இல்லை. அவரிடம் இருந்து எந்த செய்தியும் கேட்கவும் இல்லை. இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் இறந்து விட்டார் என்று மட்டும் அவர் அறிய வந்துள்ளார்.

அன்பான கணவர், குடும்பத்தோடு சமரசம்

அவருடைய கணவரான ஜேம்ஸ் கிகான்டெய்ரி 2001 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். “அவர் என்னிடம் அன்பு காட்டினார்.. என்னை நன்றாக பார்த்து கொண்டார்” என்கிறார் கயிதாராகாபிவி.

“நான் உன்னை காட்டில் இருந்து அழைத்து வந்தேன். உன்னை கஷ்டப்பட வைக்கப்போவதில்லை” என்று கணவர் கூறியதாக தெரிவித்தார்,

“எங்களுக்கு 6 குழந்தைகள். அவர் இறப்பது வரை நாங்கள் இந்த வீட்டில் தான் வாழ்தோம் என்று கயிதாராகாபிவி உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். .

தசாப்தங்கள் செல்ல செல்ல, அவர் தன்னுடைய குடும்பத்தோடு நல்லிணக்கம் ஏற்படுத்தி கொண்டார்.

“நான் கிறிஸ்தவராக மாறிய பின்னர் அனைவரையும் மன்னித்து விட்டேன். என்னை படகில் ஏற்றி தண்டனை தீவிற்கு கொண்டு சென்று, அங்கு விட்டு வந்த என்னுடைய சகோதரரை கூட மன்னித்து விட்டேன். என்னுடைய குடும்பத்தினரை சந்திக்க நான் வீட்டுக்கு போவதுண்டு. அவர்களை பார்த்தால், வாழ்த்துவதும் உண்டு” என்று கயிதாராகாபிவி தெரிவித்தார்.

வரலாற்று நபராக

தண்டனை தீவிற்கு அனுப்பப்பட்ட பெண்களில் கடைசியானவர் மௌடா கயிதாராகாபிவி என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவ மதமும், அரசும் இந்த பகுதியில் மிகவும் வலுவாக காலூன்றியபோது, இந்த வழக்கம் மறைந்துவிட்டது.

ஆனாலும், திருமணம் ஆகாதவர் கருத்தரிப்பது என்பது பல ஆண்டுகளாக முகம் சுளிக்கும் நிலையைதான் ஏற்படுத்தி வந்தது.

இந்த நடத்தையை கண்டித்த மௌடா கயிதாராகாபிவி, “எனக்கு 3 மகள்கள் உள்ளனர். தங்களின் திருமணத்திற்கு முன்னால் அவர்கள் கருத்தரித்து விட்டால், நான் அவர்களை குறைசொல்லவோ, தண்டிக்கவோ மாட்டேன்” என்கிறார்.

“இது எந்தவொரு பெண்ணுக்கும் நடக்கலாம் என்று எனக்கு தெரியும். ஏதாவது ஒரு இளம் பெண்ணுக்கு இவ்வாறு இன்று நடந்துவிட்டால், அவர் தன்னுடைய தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். அவர்கள் அவரை பராமரிப்பர். இத்தகைய தண்டனை வழக்கங்களை செயல்படுத்தி வந்தோர், பார்வையற்றோர் போல் செயல்பட்டுள்ளனர்” என்று சாடுகிறார் கயிதாராகாபிவி.