Tamil Cinema News | சினிமா செய்திகள்
திருமணத்திற்காக பட வாய்ப்புகளுக்கு நோ சொல்லும் இஞ்சி இடுப்பழகி
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயின் அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் பரபரப்பாக நடைபெற்று வருவதால் பட வாய்ப்பை தவிர்த்து வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களை கையில் எடுத்து வெற்றி கண்டவர் அனுஷ்கா ஷெட்டி தான். 2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படம் சூப்பர் ஹிட் அடித்தது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.
இந்த திரைப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தெலுங்கு திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை இத்திரைப்படம் பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நந்தி விருதையும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றுத்தந்தது.
இதை தொடர்ந்து, அனுஷ்காவின் திரை வாழ்வில் சரித்தர கதை அதிகமாக அமைந்தது. இதையடுத்து, வெற்றி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்தார். முதல் பாகத்தில் அனுஷ்கா ரசிகர்களுக்கு எமாற்றமே மிஞ்சினாலும், இரண்டாம் பாகத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து, அனுஷ்காவின் மூன்று வருட கடின உழைப்பில் வெளியான ருத்திரமாதேவி படம் என தொடர்ந்து ராணியாகவே டோலிவுட்டில் அவதாரம் எடுத்தார் அனுஷ்கா.
இதே வேளையில், அனுஷ்காவும், பிரபாஸும் காதலித்து வருவதாக கிசுகிசுப்புகள் பரவியது. இருவரின் ஜோடி பொருத்தமும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. எப்போது இவர்கள் கல்யாணம் என காத்திருந்த ரசிகர்களின் ஆசையை அதெல்லாம் இல்லப்பா என ஒரே வார்த்தையால் உடைத்தனர். ஒவ்வொரு முறை இந்த அறிவிப்பு வெளியான போதும், இருவரும் உடனே மறுப்பை தெரிவித்தனர். இருந்தும் கிசுகிசுக்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நிலவிக்கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில், இந்த வருடம் பிரபாஸின் திருமணம் கண்டிப்பாக நடந்து விடும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அனுஷ்காவுக்கு அவர்கள் பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் பிஸியாக இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அனுஷ்காவும் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார். இதற்கு ஏதுவாக பட வாய்ப்புகளையும் தவிர்த்து வருவதாக திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்படுகிறது.
