வீடு மற்றும் மனைகள் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக இயற்றப்பட்ட வீட்டு மனை வணிகச் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

வீட்டு மனை வணிகத்தை முறைப்படுத்தும் வகையில் விற்பனையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தக் காலத்திற்குள் வீடு கட்டிக் கொடுக்கப்படாவிட்டால் தாமதமாகும் காலத்திற்கு மாதம் 12% வட்டியை வாடிக்கையாளர்களுக்கு விற்பனையாளர்கள் தர வேண்டும்.
விற்பனையாளர்களிடமிருந்து பணத்தை பெற்று வேறு கட்டுமான திட்டத்தில் அதை செலவிடுவதைத் தவிர்க்கும் வகையில் 30% தொகையைத் தவிர மற்ற 70% தொகையை வங்கிக் கணக்கில் பராமரிப்பது கட்டாயமாகிறது.

மேலும், விதிமீறலில் ஈடுபடும் கட்டுமான உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி, மனை வணிகத்தில் ஈடுபடுபவர்கள், ஒவ்வொரு கட்டுமான திட்டத்தையும் ஒழுங்காற்று அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டும். திட்டத்தின் நிலை குறித்து ஒழுங்காற்று அமைப்பின் வலைதளத்திலும் அவ்வப்போது பதிவு செய்ய வேண்டும்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் அந்தமான் – நிகோபார், சண்டிகர், லட்சத்தீவு உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இத்திட்டத்தை ஏற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளதால் அந்த மாநிலங்களில் வீட்டு மனை வணிகச் சட்டம் இன்று முதல் அமலாகிறது.

இச்சட்டத்தை ஏற்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிடாததால் தமிழகத்தில் அமலாவதில் சிக்கல் உள்ளது.

வீட்டு மனை வணிகச் சட்டம் அமலுக்கு வருவதால் இனி மனை விற்பனைத்துறையில் வாடிக்கையாளரே அரசர் என்ற நிலை உருவாகி புதிய சகாப்தம் பிறப்பதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.