புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பை இழந்த தோனி பேட்டிங்கிலும் சொதப்பி வருவதாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வந்தன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியுடன் மோதியது.

முதலில் களம் இறங்கிய புனே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து அடுத்து களமிறங்கிய பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ரசிகர்கள் அளித்த உற்சாகமும், தோனியின் இமாலாய சிக்சரும்,

புனே அணி முதலில் பேட்டிங் செய்தபோது நான்காவது வீரராக தோனி களமிறங்கியபோது தோனிக்கு முன் தோனிக்கு பின் என ரசிகர்களின் வரவேற்பு மாறியது. தோனி களமிறங்குவதற்கு முன்னர்வரை “ஆர்.சி.பி….. ஆர்.சி.பி” என்ற உற்சாத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் தோனி களத்தில் இறங்கிய முதல் தொடர்ந்து “தோனி… தோனி” என்று குரல் எழுப்பி தோனிக்கு உற்சாகமளித்தனர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களே தாங்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் ஆடுகிறோமா? என்று குழப்பும்படி ரசிகர்கள் தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

ரசிகர்களின் தொடர் உற்சாகத்துக்கு தோனி அடித்த இமாலய சிக்சர் சின்னசாமி மைதானத்தின் கூரையை தாண்டி விழுந்தது மைதானத்தில் ஆரவாரக் குரல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்தன.

தொடர்ந்து ட்விட்டரில் தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் #வீ ஸ்டேண்ட்பைதோனி என்று தங்களது ஆதரவை தொடர்ந்து வெளிபடுத்தி வருகின்றன.