தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் பா.ரஞ்சித்.
அட்டக்கத்தி படம் மூலம் இயக்குநராகக் கவனம் ஈர்த்த ரஞ்சித், அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் படத்தை இயக்கினார். சுவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படத்தில் ரஞ்சித் பேசிய அரசியல் ரஜினியின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு அவர் அளித்தார். கபாலி படம் அதிரிபுதிரி ஹிட்டடிக்க, அடுத்ததாக இந்தக் கூட்டணியில் வெளியான காலாவும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்தது.

காலா படத்தில் ஸ்டார் ரஜினியின் ட்ரேட் மார்க்குகளை ரஞ்சித் அற்புதமாக கையாண்டு இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களையும் ரஞ்சித் விடுவிடாமல் அவர்களை திருப்திப்படுத்தவே முயன்றுள்ளார். எப்போதும் போல, காலாவிலும் ரஜினி மட்டுமே முன்னாள் நிற்கிறார். படத்தில் ரஜினியை தவிர ஈஸ்வரி ராவ், சமுத்திரகனியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றுள்ளது. நானா படேகரை சரியாக கையாளவில்லையோ என சில இடங்களில் சாதாரண ரசிகனுக்கு கவலையும் எழுகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது காலாவை பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

கோலிவுட் பிரபலங்களே முதல் நாள் முதல் காட்சியில் காலாவிற்கு அப்ளாஸ் தட்டி செல்கின்றனர். ரஜினிக்கு இங்கு மட்டுமல்ல எல்லா சினிமா உலகிலும் பிரபலங்களும் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய ஒரு ட்வீட் சாட்சியாக அமைந்து பலரின் புருவத்தையும் உயர்த்தி விட்டது. நானும் ரஜினியின் தீவிர ரசிகன், தான் என பாலிவுட் ஸ்டார் ஐகான் அமீர்கான் வெளியிட்ட ட்வீட் வைரலாக பரவியது. அதில், ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகனாக விரைவில் காலா படத்தை பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், அமீர்கான் நடிப்பில் விரைவில் பா.ரஞ்சித் படத்தை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருக்கிறது. த்ரி இடியட்ஸ், பி.கே., தங்கல் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களைத் தந்த அமீர் கான், எப்போதுமே கதையை மிகவும் கவனமாகத் தேர்வு செய்வார். அமீர் கான் படத்தை இயக்குவது தொடர்பாக சமீபத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்தவகையில், பா.ரஞ்சித் படத்தை அமீர் உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது. கபாலி, காலாவைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் பா.ரஞ்சித் முத்திரை பதிக்க நாம் வாழ்த்துவோம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.