ரீமேக் படத்துலயும் ஒரு கவுரவம் வேணும்னு நினைக்கிற ஆள் போலிருக்கு பவன் கல்யாண். ஆந்திராவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் தனிக்கட்சி கண்ட தங்கத் தலைவனும் கூட! வெகு காலமாகவே அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து நேரடி தமிழ் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று ஒரு சில இயக்குனர்கள் முயல, அந்த முயற்சி இன்றளவும் அந்தர் பல்டியாகவே இருக்கிறது. தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது தனி பாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பவன்.

வரிசையாக தமிழ்பட இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். முதலில் எஸ்.ஜே.சூர்யா. அதற்கப்புறம் பா.ரஞ்சித். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவர்கள் இருவருமே பவன் கல்யாணுக்காக ரீமேக் படங்களைதான் இயக்கப் போகிறார்கள். இந்த இரு ரீமேக் படங்களும் அஜீத் படங்கள்.

முதலில் எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கும் படம் வீரம். அந்த படத்தை முடித்ததும் வேதாளம் படத்தை ரீமேக் செய்யப் போகிறாராம் பா.ரஞ்சித். இவரே ஏராளமான நல்ல கதைகள் வைத்திருக்கும் போது ஏன் வேதாளம் படத்தை ரீமேக் பண்ண வேண்டும்? பா.ரஞ்சித் மீது தீராத நம்பிக்கை வைத்திருக்கும் பவன், அதே அளவுக்கு நம்பிக்கையை வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் மீது வைத்திருக்கிறார்.