எனக்கு சிறுநீரக கோளாறா? ராணாவின் விளக்கம்

தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராணா டகுபதி விளக்கம் அளித்து இருக்கிறார்.

ராணா என்பவர் முதலில் த்ரிஷாவின் காதலர் என்ற வதந்தியால் தமிழ் ரசிகர்களிடம் செம வைரலாக பரவினார். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தியிலும் பிஸியாக நடித்து வருபவர் ராணா டகுபதி. 2010ம் ஆண்டு லீடர் படத்தின் மூலம் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தவருக்கு, பாகுபலி படம் பெரிய ப்ரேக் கொடுத்தது. படத்தில் நாயகன் வேடம் இல்லை என்றாலும் வலுவான வில்லன் வேடம் ராணாவிற்கு கச்சிதமாக பொறுந்தியது. பல்வாள் தேவனாக அவரின் நடிப்பிற்கு பல தரப்பிலும் அப்ளாஸை பெற்றார்.

இதற்கு முன்னர், தமிழில் அஜித்துடன் ஆரம்பம் படத்திலும், அனுஷ்காவுடன் இஞ்சி இடுப்பழகி படத்திலும் சிறப்பு வேடத்தில் மட்டுமே ராணா நடித்திருந்தார். இதை தொடர்ந்து, முழு நீள தமிழ் படமான பெங்களூர் நாட்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் சக்கை போடு போட்டு வரும் ராணாவிற்கு ஒரு பிரச்சனையும் இருக்கிறது.

இவருக்கு சிறு வயது முதலே வலது கண்ணில் பார்வை திறன் கிடையாது. இதனால் இடது கண்ணால் மட்டுமே மற்றவர்களை பார்க்க முடியும். யாரோ செய்த கண் தானத்தால், 10 வருடத்திற்கு முன்னர் தான் ராணாவிற்கு வலது கண்ணில் பார்வை கிடைத்துள்ளது. இத்தகவலை ஒரு பேட்டியில் ராணா தெரிவிக்க அனைவரிடமும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது அந்த கண்ணில் மீண்டும் பிரச்சனை உருவாகி இருப்பதால், சிங்கப்பூரில் சிகிச்சை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், அவரின் சிகிச்சைக்கு அதிகப்படியான ரத்த அழுத்தம் பிரச்சனையாக இருப்பதால் குறையும் வரை மருத்துவ குழு காத்திருக்கின்றனர். துரதிஷ்டவசமாக இத்தகவல் டோலிவுட் வட்டாரத்தில் வேறு மாதிரியாக பரவி விட்டது. நடிகர் ராணா சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுவதாகவும் அவர் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இத்தகவலை ராணா மறுத்து இருக்கிறார். எனக்கு சிறுநீரக பிரச்சனை எல்லாம் கிடையாது. கண் அறுவை சிகிச்சை செய்ய இன்னும் ரத்த அழுத்தம் குறையாமல் இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கிறார்.