தமிழக அரசின் மிக உயரிய பதவியான தலைமை செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் ராம மோகன் ராவ். ஊழல் புகாரில் சிக்கி பதவியிழந்த முதல் தலைமை செயலாளர் என்ற பெயர் இவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பலரையும் பின்னுக்கு தள்ளி தலைமை செயலர் பதவி பெற்றார் ராவ் மோகன ராவ். சீனியாரிட்டி அடிப்படையில் 20வது இடத்தில் இருந்த ராவ் பதவி பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மூத்த அதிகாரிகள் பலரையும் தாண்டி ராவ் தலைமை செயலர் பதவி பெற்ற போதே சர்ச்சைகள் உருவாகியது.

ராம் மோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த, 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2017 ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற உள்ளார்.

தலைமைச் செயலர் பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 16 பேர் இருந்தனர். இவர்களில் சண்முகம், கிரிஜாவைத்தியநாதன், ராஜிவ் ரஞ்சன், சத்தியகோபால்சாய் ஆகியோர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் ராம மோகன் ராவ்தான் தலைமை செயலாளராக வரப்போகிறார் என்ற பேச்சு அடிப்பட்டது. அப்போது அவர், கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில், முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூன், 8 ம் தேதி, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தலைமை செயலாளராக இருந்த ராம மோகன் ராவ், மணல் அதிபத் சேகர் ரெட்டியுடன் நட்பில் இருந்தது தெரிய வரவே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 25 மணி நேரம் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் பிடிப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் நடத்திய சோதனையில் ராம மோகன் ராவின் லேப் டாப், செல்போன் போன்றவைகளை கைப்பற்றினர். அதில் இருந்த தகவல்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ராமமோகனராவும், சேகர்ரெட்டியும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று அவர்கள் போனில் பேசியது தெரியவந்தது. கூட்டிக்கழித்து பார்த்து சேகர் ரெட்டி உடனான நட்பையும் ஊழலில் அவருக்கு இருந்த பங்கையும் உறுதி செய்தனர் அதிகாரிகள்.