ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த அறிக்கை குறித்து மருத்துவரும், பா.ம.க தலைவருமான ராமதாஸ் பல்வேறு பரபரப்பு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்.

” மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளின் காரணமாக சில அடி தூரம் நடக்கும் அளவுக்கு ஜெயலலிதா தேறியிருந்தார் என்று மருத்துவர் பாபு ஆப்ரஹாம் கூறியுள்ளார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம்.

அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்ய அப்போலோ நிர்வாகம் தவறியது ஏன்? என்ற வினாவும் கூடுதலாக எழுகிறது. ஜெயலலிதாவின் உடலில் இருந்த காயங்கள், அவரது கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்த ஐயங்களுக்கும் மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கம் மனநிறைவு அளிக்கும்படியோ, ஏற்றுக் கொள்ளும் வகையிலோ இல்லை.

ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த அனைத்து ஐயங்களும் தீர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுநர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை (Multi Disciplinary Investigation Team) அமைத்து விசாரணை நடத்த ஆணையிடுவது தான். எனவே, அத்தகைய விசாரணைக்கு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.