பாலியல் வழக்கு! குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை விதிப்பு.. பரபரப்பு தீர்ப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுவதாக சிபிஐ நீதிபதி அறிவித்துள்ளார்.

முன்னதாக நீதிபதிக்கு முன்பு நடந்த இருதரப்பு வாதத்தில், குர்மீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் குர்மீத் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சமூக சேவையில் ஈடுபடுபவர் என்பதையும் அவரின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்கு மிகக் குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிபதி முன்னால் மன்னிப்பு கோரி கண்ணீர் சிந்திய குர்மீத் ராம் ரஹீம் இதற்கிடையே குர்மீத் ராம் ரஹீம் சிங் மன்னிப்பு கோரி, நீதிபதியின் முன்னால் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது.

தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கைதை கண்டித்து தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாபில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்தனர். கலவரம் பரவாமல் தடுக்க செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சிர்ஸா ஆசிரமத்தைச் சுற்றி போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. ரோட்டக் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் குக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட்டது. இதற்காக பஞ்ச்குலா சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக் சிறைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை அவர் அறிவித்தார். குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரம் வெளியாவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டிருந்தன. ரோட்டக் சிறை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. முக்கிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. 926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

ஐ.ஜி. நவ்தீப் சிங் கூறியபோது, ரோட்டக் சிறை வளாகத்தில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே தற்போது குர்மீத் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து குர்மீத்துக்கு சிறை சீருடை வழங்கப்பட்டு, தனி அறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.