News | செய்திகள்
9 ஆண்டுக்குப்பிறகு முனியை மீண்டும் கொண்டு வந்த ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராக, நடிகராக பலராலும் அறியப்பட்ட ராகவா லாரன்ஸ் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘முனி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியே அவரை இன்றளவும் இயக்குனராக வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ‘முனி’ படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர். இப்படத்தில் அவர் ஏற்றிருந்த முனியாண்டி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. முனி படத்தின் 2ஆம் பாகமான காஞ்சனா, 3ஆம் பாகம் காஞ்சனா 2 ஆகியவற்றில் ராஜ்கிரண் நடிக்கவில்லை.
இந்நிலையில், கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸுடன் இணைகிறார் ராஜ்கிரண். வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்காக ராகவா லாரன்ஸ் இரண்டு படங்களை இயக்குகிறார். அதில் ஒன்று ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மற்றொன்று ‘முனி’யின் 4ஆம் பாகமான ‘நாகா’. இப்படத்தில்தான் மீண்டும் நடிக்கிறார் ராஜ்கிரண். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
