வேண்டாமென ஒதுங்கிப் போனாலும் விட்டுவிடுவதற்கு அரசியல் ஒன்றும் மானஸ்தர்களின் கூட்டமல்ல. பல வருஷங்களாகவே வேணாம் வேணாம் என்று சொல்லி வந்தாலும், மீசையோரத்தில் கொஞ்சம் ஆசையை ஒட்டிக் கொண்டுதான் நடமாடி வருகிறார் ரஜினி. அதைதான் தன் படங்களில் வசனங்களாக வெளிப்படுத்தியும் வருகிறார். பழம் பழுக்குற நேரத்தில், வவ்வாலுக்கும் பல் முளைத்த மாதிரி மத்தியை ஆள்வதற்கு பி.ஜே.பி வந்தது அக்கட்சியின் நெடுங்கால விசுவாசியான ரஜினியை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலாவது அவர் தமிழக பி.ஜே.பி யின் தலைவர் ஆகாவிட்டால், வேறு சூழ்நிலை எப்போது வரும்?

மீடியாக்களும், நடுநிலையாளர்களும் இந்த பொன்னான தகவலுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காதில் தேன் பாய்ச்சுவது போல அமைந்துவிட்டது அமித்ஷாவின் பதில் ஒன்று. நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமித்ஷா, “ரஜினி பி.ஜே.பி யில் இணைய வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் சில நாட்களாக நடந்து வந்த களேபரங்களின் காரணமாக அமித்ஷா போட்ட இந்த குண்டு வெடிக்காமலே போய்விட்டாலும், மறுபடியும் குண்டு வீசி நாட்டில் சலசலப்பை உண்டு பண்ண பி.ஜே.பி தயங்கப் போவதில்லை. அப்படியொரு சுச்சுவேஷன் வந்தால், ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள் காவியுடையுடன் நடமாடுகிற காட்சியை மனக்கண்ணில் நினைக்கும் போதே உய் உய்… என்று விசிலடிக்கத் தோன்றுகிறதல்லவா?

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. உதடுகளை காயப் போடாமல் காத்திருங்க மகா ஜனங்களே…