ரஜினிகாந்த் நடித்து மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‛கபாலி” திரைப்படம் அடுத்த வாரம் ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு டப்பிங் பேசி முடித்ததும் ரஜினிகாந்த், அமெரிக்கா சென்றார். அங்கு “2.0” படத்தின் பணிகளில் அவர் கலந்து கொள்ள சென்றார் என்று முதலில் பேசப்பட்டது. அதன்பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதென்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்து வரும் ரஜினிகாந்த் வரும் 20ம் தேதி சென்னை திரும்ப உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி அமெரிக்காவில் நலமாக இருப்பதாகவும் , அவர் முழுமையான ஓய்வில் இருப்பதாகவும் அவருடன் தொலைபேசியில் பேசிய தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர்களிடமும் ரஜினியின் உடல்நிலை பற்றி வெவ்வேறு விதமான தகவல்கள் பரவின. ரஜினி குடும்பத் தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாததால் ரசிகர்களுக்கும் குழப்பமாக இருந்தது. இப்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினிகாந்த் வரும் 20ம் தேதி சென்னை திரும்புகிறார் என வந்துள்ள தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு அவர் அடுத்த மாதம் முதல் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது.