fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா’: இரட்டை வேடங்களில் அசத்தினார்

Entertainment | பொழுதுபோக்கு

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா’: இரட்டை வேடங்களில் அசத்தினார்

ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் பெரிய வெற்றிப் படம் ‘பில்லா.’ இதில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்தார். ரஜினியை முழு ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம் இது.

Billa-2

சர்வதேச கடத்தல்காரர்களில் ஒருவனான பில்லா (ரஜினி) அடிதடிக்கு அஞ்சாதவன். எத்தனை அசகாய போலீசாக இருந்தாலும் பில்லாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாமர்த்தியத்திலும் வல்லவனாக இருக்கிறான் இந்த பில்லா.

சென்னை நகர போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் (பாலாஜி), பில்லாவை பிடிப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்.

Billa-5இதற்கிடையே சர்வதேச போலீஸ் அதிகாரி (மேஜர் சுந்தர்ராஜன்) சென்னை வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமான கடத்தல்காரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொழில் தொடர்பான ஒரு `மீட்டிங்’குக்காக சென்னைக்கு வந்திருப்பதை கூறி, போலீஸ் வட்டாரத்தை உஷார்படுத்துகிறார்.

பில்லாவிடம் விசுவாசமாக இருந்த ஜானி என்ற இளைஞனுக்கு, கடத்தல் வாழ்க்கை அலுத்துப் போகிறது. அவன் பில்லாவுக்கு `டிமிக்கி’ கொடுத்துவிட்டு காதலியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கிறான். இதை மோப்பம் பிடித்து விட்ட பில்லா, அவனது பயணத்தை தடுப்பதுடன் உயிரையும் நிறுத்தி விடுகிறான்.

இதனால் வெகுண்டெழுந்த அவன் காதலி (பிரவீணா) தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் பில்லாவை சந்திக்கிறாள். அவனை தனது வசீகரப் புன்னகையில் மயக்கியபடியே போலீசுக்கும் ரகசிய தகவல் கொடுத்து விடுகிறாள்.

போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் பட்டாளமே பில்லா தங்கியிருந்த ஓட்டலை சுற்றி வளைக்கிறது. ஆனால் பில்லா அந்தப் பெண்ணையே தனக்குப் பாதுகாப்பாக பயன்படுத்தி, தப்பித்து விடுகிறான். அதோடு அந்தப் பெண்ணையும் கொன்று விடுகிறான்.

ஜானியின் தங்கை ராதாவுக்கு (ஸ்ரீபிரியா) இந்த தகவல் தெரியவர, அவள் தனக்கு வேண்டிய ஒரு கராத்தே மாஸ்டர் மூலம் `பில்லா’வின் கூட்டத்தில் சேருகிறாள்.

Billa-6

பில்லா அவளை நம்பத் தொடங்கிய நேரத்தில் அவள் கொடுத்த ரகசியத் தகவல் போலீசை எட்டுகிறது. இம்முறை `பில்லா’வால் தப்ப முடியவில்லை. போலீசின் துப்பாக்கி, பில்லாவைத் துளைக்கிறது.

அரைகுறை உயிருடன் ஆற்றில் விழுந்து அப்போதைக்கு தப்பிக்கும் பில்லா, கடைசியில் `டி.எஸ்.பி’ அலெக்சாண்டரின் காரில் ஏறிக்கொண்டு, அவரையே மிரட்டி தனது இருப்பிடத்துக்கு கொண்டு விடச்சொல்கிறான். ஆனால் பாதி வழியில் அவன் உயிர் பிரிந்து விடுகிறது.

பில்லா இறந்து போனது டி.எஸ்.பி. அலெக்சாண்டருக்கு மட்டுமே தெரியும். பில்லா’வை உயிருடன் பிடித்திருந்தால் அவன் மூலம் சர்வதேச அளவிலான கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை திரட்டியிருக்க முடியும். பில்லாவின் கடத்தல் கூட்டத்தையும் ஒட்டுமொத்தமாக பிடித்திருக்க முடியும். இந்த இரண்டுமே நடக்காததால், பில்லாவை ஒரு கல்லறைத் தோட்டத்தில் ரகசியமாய் புதைக்க ஏற்பாடு செய்த டி.எஸ்.பி. `பில்லா’ சாயலில் ரோடுகளில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தி வந்த ராஜப்பா (இன்னொரு ரஜினி) என்ற இளைஞனை `பில்லா’ போல தயார் செய்கிறார்.

ராஜப்பா புதிய `பில்லா’வாக எதிரிகள் இருப்பிடத்தில் நுழைகிறான்.

இதற்கிடையே பில்லா மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்து கொண்ட தகவல் போலீசை எட்டுகிறது. அவர்கள் பில்லாவை வேட்டையாட நடவடிக்கை எடுக்கிறார்கள்.

பில்லா’வாக நடிக்கும் ராஜப்பாவின் நிலைதான் பரிதாபம். போலீசிடம் மாட்டினாலும் உயிர் உத்தரவாதமில்லை. கடத்தல் கூட்டம் தெரிந்து கொண்டாலும் பரலோகம் நிச்சயம். அதோடு தனது அண்ணன் ஜானியை கொன்றதற்காக எப்போது கொல்லலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ராதா ஒரு பக்கம்.

இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், கடத்தல்காரர்களின் ஒரிஜினல் தலைவன் என்பது ராஜப்பாவுக்கு தெரியவருகிறது. போலி போலீஸ் அதிகாரி, `ராஜப்பா’வை பில்லாவாக தயார் செய்திருந்த டி.எஸ்.பி.யை `குளோஸ்’ பண்ணிவிட்டு, `பில்லா’வாக நடிக்கும் ராஜப்பாவுக்கு குறி வைக்கிறார்.

Billa-4

ராஜப்பா தனது பாடல் குழுவினருடன் அதிரடியாக மோதல் களத்தில் இறங்கி, போலி சர்வதேச போலீஸ் அதிகாரியை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்.

இதற்கிடையே ராஜப்பாவை யாரென்று தெரிந்து கொண்ட ராதாவும் உதவுகிறாள்.

சர்வதேச கடத்தல் கூட்டம் ராஜப்பாவால் பிடிபட, போலீஸ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ராஜப்பா-ராதா திருமணத்தில் படம் முடிகிறது.

பில்லா, ராஜப்பா என இரண்டு வேடத்தில் ரஜினி நடிப்பில் கலக்கிய படம். பில்லாவாக தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தினார்; ராஜப்பா என்ற கிராமத்துப் பாடகன் கேரக்டரிலும் நெளிவும் குழைவும் கலந்து ரசிகர்களை கவர்ந்தார்.

போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டராக பாலாஜி சிறப்பாக நடித்தார். படத்தை தயாரித்ததும் இவரே.

அதுவரை காமெடி செய்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனை குணச்சித்திர கேரக்டரில் அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

நடிகர்கள் ஏவி.எம்.ராஜன், அசோகன், கவுரவ வேடத்தில் தோன்றினார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு’, ‘நினைத்தாலே இனிக்கும் சுகம்’, ‘மை நேம் இஸ் பில்லா’ போன்ற பாடல்கள் இப்போது கேட்டாலும் திகட்டாத ரகம்.

டைரக்ட் செய்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், அதற்குப் பிறகு தனது பெயரை `பில்லா’ ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றிக்கொண்டார்.

26-1-1978-ல் வெளியாகி, 260 நாள் ஓடி சாதனை படைத்த இப்படம், வசூலிலும் புரட்சி செய்தது. ரஜினியை நாயகனாக்கி படமெடுத்தால் `நிச்சய லாபம்’ என்ற நம்பிக்கைக்கு நிரந்தரமாக அஸ்திவாரமிட்ட பெருமையும் இந்த `பில்லா’ படத்துக்கு உண்டு.

Billa-3

பில்லாவுக்குப் பிறகு 4-6-1980-ல் ‘ராம் ராபர்ட் ரகீம்’ வெளிவந்தது. இந்தியில் வெளியான ‘அமர் அக்பர் ஆன்டனி’ படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான ‘அன்புக்கு நான் அடிமை’ 19-7-1980-ல் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ரஜினியுடன் கராத்தே மணியும் இணைந்து நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார். படத்தை சி.தண்டாயுதபாணி தயாரித்தார். ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top