தன் மீது சந்தேகப்பட்டு சூட்டிங்கை நிறுத்திய ரஜினி.. பின் விருதுகளை தட்டி தூக்கிய தலைவர்

சினிமாவின் ஆரம்ப காலத்தில் வில்லனாக தன்னுடைய நடிப்பை தொடங்கி தற்போது சூப்பர் ஸ்டாராக அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் உண்டு.

இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் இவர் நடித்துள்ள ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு படமாகும்.

இந்த படத்தை எஸ் பி முத்துராமன் இயக்கி, பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி இருந்தார். ரஜினிகாந்துடன் இணைந்து படாபட் ஜெயலட்சுமி, சோ, தேங்காய் சீனிவாசன், சங்கீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பொழுது படம் ஓடுமா என்ற சந்தேகத்திலேயே இருந்துள்ளார்.

இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு கதை ஆசிரியர் பஞ்சு அருணாச்சலம் ரஜினிகாந்திடம் சென்று படத்தை ஒரு முறை எடுத்து பார்ப்போம் என்று சமாதானம் செய்துள்ளார். அதன் பிறகு ரஜினிகாந்த் அரை மனதுடன் அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

1979 இல் வெளியான இப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் குழந்தை முதல் வயதானவர் வரை தன் நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு பாராட்டும், விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

அதுவரை ரஜினிகாந்துக்கு வெறும் ஸ்டைல் மட்டும் தான் வரும் என்று இருந்த கருத்து மாறி, திறமையான நடிகர் என்ற பெயரை இப்படம் அவருக்கு பெற்று தந்தது. இப்படி தனது நடிப்பின் மீது தானே சந்தேகப்பட்டு வெற்றிகண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்