ரஜினி தற்போது ஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் முன்னதாக வெளியான `எந்திரன்’ மிகப்பெரும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதன் அடுத்த வெர்ஷனாக `2.0′ என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமாரும் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு ரஜினி, மீண்டும் கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான ‘கபாலி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி மீண்டும் டானாக நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. `கபாலி’ படத்தில் மலேசியா டானாக வந்த ரஜினி இந்த படத்தில் மும்பை டானாக வருகிறாராம்.

மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆதரவாக போராடும் ஒருவராக ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்னர், மும்பை சென்ற பா.ரஞ்சித் படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே ரஜனி `பாட்ஷா’ படத்தில் மும்பை டானாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.