Rajini_politics

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த். உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எப்போதும் எளிமையாகவே நடந்து கொள்வார். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர

இவர் தனது ராகவேந்திரா மண்டபத்தில், தன்னுடைய குருவின் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார்.

இந்தவிழாவில் பேசியதாவது, மனிதப்பிறவியே அபூர்வம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? கடவுள் யார்? ஆத்மா என்பது என்ன? என்ற கேள்விகள் வருவதே ரொம்ப அபூர்வம். அந்த மாதிரி கேள்விகள் வந்த பின்னர் அதற்கு விடை கொடுப்பதற்கு குரு அமைவது அதைவிட அபூர்வம். குரு கிடைத்து அவருடைய போதனைகள் கிடைப்பது அதைவிட அதைவிட அபூர்வம்.

நான் ஒரு சினிமா ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விடவும், நான் ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்வதில் ரொம்ப பெருமைப்படுகிறேன். பணம், புகழ் ஒரு பக்கம் வைத்து ஆன்மீகம் ஒரு பக்கம் வைத்தால் நான் ஆன்மீகம் இருக்கும் பக்கம்தான் போவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஆன்மீகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு.

நான் பவரை கொஞ்சம் விரும்புபவன். எனது முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன். அவர்தான் என்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தியது. ராமகிருஷ்ணா பரமஹம்சர் என்னுடைய இரண்டாவது குரு. ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன்.

ராகவேந்திரா ஆசிரமத்தில் நான் பக்தியை கற்றுக்கொண்டேன். ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழுப்புவதை கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் சமூக பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன். வேதத்தில் உள்ள சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர்.

இமயமலையில் பல ரகசியங்கள் உள்ளன. நமது உடம்பிற்கு தேவையான காஸ்மிக் சக்தியை யோக சக்கரங்கள் பெற்று இயக்குகின்றன. விதை போடும் முன் பூமியை பதப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கடவுள் என்ற விருந்தாளி நம் இதயத்திற்குள் வருவதற்கு அதனை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.