கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கலாம் என புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

காலா மற்றும் 2.ஓ படங்களை முடித்துக் கொண்ட ரஜினிகாந்த், கடந்த வருட இறுதியில் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இதனால், மீண்டும் படங்களில் நடிப்பதை குறைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அது ஒரு பக்கம், இது ஒரு பக்கம் என்ற ரீதியில் தனது அடுத்த படத்திற்காக பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார். அதில், வித்தியாசமான கதையில் அசத்தி வரும் கார்த்திக் சுப்புராஜிற்கு ஓகே சொன்னார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். முதற்கட்டத்தை முடித்த படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இதற்காக படக்குழு தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு முடிந்த நிலையில், நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக முன்னரே கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

அதில், த்ரிஷா, அஞ்சலி, தீபிகா படுகோனே பெயர்கள் தான் அதிகமாக அடிப்பட்டது. ஆனால், கபாலி படத்தில் இருந்து ரஜினி தன் நாயகியாக இளம் நாயகிகளை விடுத்து கொஞ்சம் வயதான நாயகிகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். ராதிகா ஆப்தே, ஈஸ்வரி ராவ் என பட்டியல் தொடங்கி விட்டது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகி இருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. ஆனால், இதுகுறித்து இருதரப்பும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்து இருக்கிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். தகவல் உறுதி செய்யும் பட்சத்தில் ரஜினியுடன் சிம்ரன் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran

தொடக்கத்தில் இந்தி, மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த சிம்ரன் 1997ம் ஆண்டு வி.ஐ.பி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல்முறையாக அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக புகழ்பெற்ற சிம்ரன், முன்னணியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகினார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவருக்கு இதுவரை சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பது மட்டும் உண்மை.