அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கி முன்னணி இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். அதோடு, தனது அடுத்த படத்தையும் அவர் ரஜினியை வைத்தே இயக்குகிறார் என்பது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும், ரஜினியை வைத்து படம் இயக்கியவர்கள் ரஜினிக்காகவே கதை பண்ணினார்கள். ஆனால் ரஞ்சித்தோ, ரஜினி படத்தை தனது பாணியில் இயக்கினார். ஆனபோதும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால் கபாலி படம் சில விமர்சனங் களை எதிர்கொண்டபோதும் ஹிட்டடித்தது.

விளைவு, மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் ரஞ்சித். அதுவும் ரஜினியின் மருமகன் தனுஷே அந்த படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரஜினியை தான் இயக்கும் இரண்டாவது படத்தை இன்னும் பிரமாண்டமாக இயக்க தயாராகி வரும் ரஞ்சித், அந்த படத்தை ரஜினியின் பாட்ஷா படத்துக்கு இணையான அதிரடி படமாக இயக்கப்போகிறாராம்.

அதோடு, பாட்ஷா படப்பிடிப்பு நடை பெற்ற மும்பைக்கு கடந்த வாரம் சென்ற அவர், அங்கு முக்கிய லொகேசன்களை பார்த்துவிட்டு வந்துள்ளார். அந்த வகையில், ரஜினி தனது கேரியரில் முக்கியமான படமாக கருதி வரும் பாட்ஷாவை விடவும், இன்னொரு அதிரடி பாட்ஷாவை தான் இயக்கி விட வேண்டும் என்பதுதான் பா.ரஞ்சித்தின் தற்போதைய டார்க்கெட்டாக உள்ளதாம்.