ஆழ்வார் பேட்டைக்கும், போயஸ் கார்டனுக்கும் அவ்வளவு தொலைவு இல்லைதான். ஆனால் ரஜினியும் கமலும் பேசிக் கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் ஆடிக்கு ஒரு முறையோ, அமாவாசைக்கு ஒருமுறையோதான் நடக்கும். தேவைகள் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், தேவைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது இப்போது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகம், டிரைவர் இல்லாத குப்பை வண்டியின் திருவீதியுலாவாகிவிட்டது. வாயிருப்பவர் எல்லாம் நாஞ்சில் சம்பத் ஆகிவிட்டார்கள். சும்மா கிடந்த கமலை இவர்கள் சீண்ட, பதிலுக்கு அவர் முறைக்க, நடுவில் ரஜினி அரசியல் ஆசை காட்ட…. எப்படி எப்படியோ மாறிவிட்டது தமிழ்நாடு.

இந்த இக்கட்டான நேரத்தில் ரஜினிக்கு முன் கமல் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்கிற அளவுக்கு இருக்கிறது நாட்டு நடப்பு. இவ்வளவு கொடூரமான நேரத்தில் கூட இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளவில்லை என்றால் என்னாவது? அதற்கான சந்தர்பத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்களோ, இல்லையோ? காலம் உருவாக்கியிருக்கிறது.

காலா படத்திற்காக ஈவிபி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் ரஜினி தொடர்ந்து இந்த செட்டில்தான் வந்து நடிக்கப் போகிறார். அதுமட்டுமல்ல… தினந்தோறும் அவர் வந்து போகக் கூட தேவையில்லை. அங்கேயே பிரமாதமான தங்கும் காட்டேஜ்கள் அமைக்கப்பட்டுவிட்டது. இதில் ஏதாவது ஒன்றில் ரஜினி தங்கிக் கொள்வார் என்கிறார்கள்.

இதே ஸ்டூடியோவில்தான் கமல் கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான வீடும் அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்களாவது அங்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் கமல். அருகருகில் படப்பிடிப்பு நடந்தால் ஜென்ம எதிரிகளாக இருந்தால் கூட மீட் பண்ணி ஒரு ஹாய் சொல்லிவிடுவது சினிமா பண்பாடு. சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினியும் கமலும் மீட் பண்ணாமலா இருப்பார்கள்?