dinakaran rajini

ரஜினியை மையமாக வைத்து திமுக.வை தனிமைப்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் அடுத்தக்கட்ட நகர்வுகளை பொறுத்தே டெல்லியின் அடுத்த மூவ் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தற்போது மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி தமிழக அரசியல் நிலவரம் குறித்து தவறாமல் தனது நண்பர்களிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்கிறாராம். குறிப்பாக அண்மையில் நடந்த கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்திற்கு தேசிய தலைவர்கள் வருகை, டி.டி.வி. சிறையில் இருந்து வெளியே வந்தது, தமிழகத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் உள்ளிட்ட தகவல்களை விரிவாக பேசியுள்ளார்.

மும்பையில் காலா படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினி. தொடர்ந்து சென்னையில் செட் போட்டு காலாவின் இதர காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினி சென்னை திரும்பியதும் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்துகொண்டாலும், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கான யூகங்களை ஏற்கனவே அவர் வகுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்தது. தற்போது அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ரஜினி அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லையாம். மேலும் இதர பிரதான கட்சிகளான மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதன் முக்கியத்துவத்தை இழந்ததையடுத்து ரஜினியின் டார்கெட் திமுக மட்டுமே என்று கூறப்படுகிறது. திமுகவை மட்டுமே தனது போட்டியாக எண்ணுகிறாராம். திமுகவிற்கு இதுநாள் வரை வலுவான போட்டியாக இருந்த அதிமுக சிதறுண்டு போனதை அடுத்து, அந்த இடத்திற்கு தான் ஆரம்பிக்கப் போகும் புது கட்சியை கொண்டு வர முனைப்புடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறாராம் சூப்பர் ஸ்டார்.

சென்னையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பின் போது ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, அவரை சுதந்திரமாக செயல்படாவிட்டால் நல்ல முடிவுகளை எடுப்பார் என்று மறைந்த பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். ஸ்டாலினை மறைமுகமாக பாராட்டுவதாக இது பார்க்கப்பட்டாலும், அரசியலுக்கு இது சரியாக வராது என்று உணர்ந்த ரஜினி அவர் சொல்ல விரும்பிய கருத்தை சோ தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக சீனியர் ஒருவர், ரஜினிக்கு ஜெ.விடம் இருந்து நெருக்கடி வந்தபோது அவரை நாமதான் காப்பாற்றினோம் என்றாராம். அவரது பேச்சை ஸ்டாலினும் ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. இது ரஜினியின் காதுகளுக்குச் சென்றபோது, 1996ல் திமுக.விற்கு ஆதரவு கொடுத்து அந்த அம்மாவின் பகையை நாமதானே சம்பாதித்து கொண்டோம். இப்படி பால் கொடுத்த மாட்டையே பல்லைப் பிடுங்கி பதம் பாக்குறாங்களே.. என்று நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களிடம் கூறி நொந்து கொண்டாராம். இதனால் திமுக மீதும் ஸ்டாலின் மீதும் ரஜினி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஜினியை தனது நண்பர், தம்பி என்றெல்லாம் கருணாநிதி பாசமுடன் அழைப்பதுண்டு. அவரது சட்டமன்ற வைர விழாவுக்கு அகில இந்திய தலைவர்கள் பலர் சென்னையில் முகாமிட்டபோதும், ரஜினியிடம் இருந்து ஒரு வரி வாழ்த்து செய்தி கூட வரவில்லை, இது ரஜினிக்கு இருக்கும் திமுக மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் நகர்வுகளை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வரும் ரஜினி விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக.வின் தொடர் கோரிக்கைகளை ரஜினி நிராகரித்த நிலையில், புதிய மாஸ்டர் பிளானை உருவாக்கிய டெல்லி மேலிடம், சில கடுமையான நிபந்தனைகளின் பேரில் சிறையில் இருந்து டி.டி.வி.தினகரனை திறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் அமைதிக்கும், டி.டி.வி.தினகரன் அரசியல் ரீ-என்ட்ரிக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

துணுக்கு செய்தி: திமுகவுடன் ஏழாம் பொருத்தத்தில் இருக்கும் நடிகை குஷ்பூவுக்கும் வைர விழாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாம். கருணாநிதி மீது மிகுந்த பாசம் கொண்ட குஷ்பூ இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகளுக்கு போன் போட்டு ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாராம்.