தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உருவாகியிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தற்போது ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகிறது. இந்த படத்திற்கு ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்பு ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற வசனம்.

இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நேற்று ரஜினியை சந்தித்து இந்த படத்தின் தலைப்பை அவரிடம் கூறி ஆசீர்வாதம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

2.0 படப்பிடிப்பில் இருந்த ரஜினியை ஜி.வி.பிரகாஷும், இயக்குனர் சாம் ஆண்டனும் நேரில் சென்று சந்தித்து, ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். ரஜினியும் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் இயக்குனர் சங்கரையும் அவர்கள் சந்தித்து படம் குறித்த தகவல்களை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ரஜினி நடிக்கும் 2.0 படத்தையும், ஜி.வி.நடிக்கும் ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.