fbpx
Connect with us

ரஜினியின் ஆக்சன் ஆரம்பம்! காலா பற்றி பிரபலம்..

News / செய்திகள்

ரஜினியின் ஆக்சன் ஆரம்பம்! காலா பற்றி பிரபலம்..

தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி ஸ்டன்ட் யூனியனுக்கு, இது பொன்விழா ஆண்டு. இந்தத் தருணத்தில், தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஸ்டன்ட் இயக்குநர்களைச் சந்தித்துப் பேசலாம் என்பது திட்டம். அன்பறிவ்-வைத் தொடர்ந்து, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், தமிழ் சினிமாவின் ஃபயரிங் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன்.
“ஸ்டண்ட் யூனியனுக்கு பொன்விழா, அப்பா சூப்பர் சுப்பராயன் 35 வருடம், உங்க அனுபவம் 10 வருடம்னு கிட்டத்தட்ட யூனியனோட வயசு உங்க `சண்டை’ குடும்பத்துக்கு. எப்படி இருக்கு இந்த அனுபவம்?”
“அப்பா, நான்… தொடர்ந்து என் தம்பி தினேஷ் சுப்பராயனையும் ஸ்டன்ட் டைரக்டர் ஆக்கிட்டார். குடும்பமே வாழையடி வாழையா ஃபைட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நிறைய ரிஸ்க் இருக்கு. ஆனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் எங்களுக்குப் புதுசா, உற்சாகமாத்தான் இருக்கு. ரொம்ப லவ் பண்ணித்தான் சண்டைபோடுறோம். அதுல கிடைக்கிற சந்தோஷமே தனி!”“ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமான சண்டைக்காட்சிகள் அமைக்கணும். அதுக்கு உங்களோட உழைப்பு எப்படி இருக்கும்?”
“நான் புஷ்கர்-காயத்ரி, தியாகராஜன் குமாரராஜாகிட்ட உதவி இயக்குநரா வேலைபார்த்த பிறகுதான், சினிமாவுல ஸ்டன்ட் மாஸ்டர் ஆனேன். அதனால, ஸ்க்ரிப்டைப் படிக்கும்போதே இந்தக் கதைக்கான சண்டைக் காட்சிகளை எப்படி வடிவமைக்கலாம்னு ஒரு ஐடியா கிடைச்சுடும். தவிர, ஒரே அடியில பத்து பேர் பறக்கிற சண்டைக்காட்சிகளை அமைக்கிறது எனக்குப் பிடிக்காது. வில்லேஜ் கதையோ, சிட்டி கதையோ… கேரக்டர் யார், அவரைச் சுற்றி என்ன இருக்கு, அவரோட சூழல் என்ன… இப்படி எல்லாத்தையும் நோட் பண்ணிக்குவேன். கேரக்டர்களோட பாடி லாங்வேஜைப் பொறுத்து, என்னோட ஸ்டடி மாறும். `ஆரண்ய காண்டம்’ படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். `களவாணி’ படத்துல வில்லன் திருமுருகன் கேரக்டருக்கு மெனக்கெட்டேன். `கடம்பன்’ படத்துக்கு வேற மாதிரி சிரமங்கள் இருந்தது… இப்படி நிறைய அனுபவங்களோடு நிறைய படிப்பினைகளும் இருக்கு!”
“எல்லா ஸ்டன்ட் இயக்குநர்களும் அடைமொழி வெச்சிருக்காங்க. நீங்க ஏன் வெச்சுக்கலை?”
“நான் சண்டைப்பயிற்சிங்கிற மொழியையே அப்பாகிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். என் பெயரோடு அப்பா பெயரும் சேர்ந்து வருதே… அதுபோதும் எனக்கு!”
“உதவி இயக்குநர், சண்டைப்பயிற்சி, தயாரிப்பாளர்… உங்க பயணமே வித்தியாசமா இருக்கே?”
“டைரக்டர் ஆகணும்னுதான் இப்பவும் ஆசை. புஷ்கர்-காயத்ரி, தியாகராஜன் குமாரராஜா… இவங்கதான் `நீ ஃபைட் மாஸ்டரா வொர்க் பண்ணு, நல்லா வரும்’னு சொன்னாங்க. எதிர்கால இயக்குநரா எனக்கும் நிறைய அனுபவங்கள் கிடைக்குமேனு ஓகே சொல்லிட்டேன். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிப் படங்கள்லயும் வேலை பார்க்கிறேன்; எல்லா மொழி இயக்குநர்களோடும் பழகுறேன். இது எனக்கு பெரிய பாடமா இருக்கு. தவிர, `அஞ்சல’, `பலூன்’ படங்களைத் தயாரிச்சது நண்பர்களுக்காக! அதேசமயம், நானும் சீக்கிரமா இயக்குநரா அறிமுகம் ஆவேன். தொடர்ந்து நல்ல கதைகளைத் தயாரிக்கவும் செய்வேன். இதுதான் திட்டம்.”
“சண்டைக்காட்சிகள் இல்லாத சினிமாக்களைப் பார்க்கும்போது உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?”
“ஸ்க்ரிப்ட்டுக்குத் தேவைப்படலைனு நினைச்சுக்குவேன், அவ்ளோதான். ஆனா, உலகளவுல ஆக்ஷன் படங்கள்தான் நல்லா ஓடுது. ஆக்ஷன் ஹீரோக்கள்தான் லைம்லைட்ல இருக்காங்க என்பதை தாழ்மையோடு தெரிவிச்சுக்கிறேன்!”
“புரூஸ் லீ, ஜாக்கிசான் நடிக்கிற படங்கள் மாதிரி படங்கள் இங்கே உருவாகுறதில்லையே?”
“கேள்வி புரியுது. எதிர்காலத்துல நிச்சயமா அவங்களோட படங்கள் மாதிரி முழு நீள ஆக்ஷன் படம் ஒண்ணு பண்ணணும்னு எனக்கு ஆசை. நம்ம கலாசாரத்துலேயே ஆக்ஷன் இருக்கு. அதைப் பற்றி தொடர்ந்து படிச்சுக்கிட்டிருக்கேன். நிச்சயம் அப்படி ஒரு படம் பண்ணுவேன்.”“ `காலா’ படத்தோட ஆக்ஷன்ஸ் எப்படி வந்திருக்கு?”
“இன்னும் ஷூட்டிங் இருக்கு. பா.இரஞ்சித் டைரக்ஷன்ல `அட்டகத்தி’ படத்துல வொர்க் பண்ணேன். அந்தப் படத்துல இருந்த லைவ் ஆக்ஷன் ‘காலா’வுலயும் இருக்கு. படம் சூப்பரா வளர்ந்துக்கிட்டிருக்கு. தலைவரோட படத்துக்கு ஸ்டன்ட் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது நிறைவேறிடுச்சு. என்னைவிட, அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார். அவர்தான், `தளபதி’ படத்துக்கு ஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணார். ஸ்பாட்ல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா இருக்கார். 9 மணிக்கு ரெடி ஆகணும்னு சொன்னா, 8.50-க்கு தயாரா இருக்கார். என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை பண்ணிக்கொடுக்கிறார். ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. அந்தத் தயக்கத்தை அவரே ஜாலியா, கூலா பேசி உடைச்சுட்டார். ரஜினி சார் வந்தாலே, எங்களைச் சுற்றி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உருவாகிடுது!”
“ஸ்டண்ட் கலைஞர்களோட இன்றைய நிலை?”
“கால்ஷீட்டுக்கு 3,500 ரூபாய் கொடுப்பாங்க. கண்ணாடியை உடைக்கிறது, தீயில வொர்க் பண்றதுக்கெல்லாம் தனி அமவுன்ட். ஆனா, பாலிவுட்ல அப்படி இல்லை. ஒரு ஃபைட்டர் கீழே விழுந்த சீனுக்கு, டைரக்டர் `ஒன்ஸ்மோர்’ கேட்டா, பேமென்ட் அதிகமாகும். இங்கே அப்படி இல்லை. ஆனா, சந்தோஷமா வொர்க் பண்றாங்க. சமயத்துல, சினிமா தொழிலாளர்கள் சம்பளம் கூட்டிக் கேட்கும்போது, அவங்களுக்குக் கொடுத்துதான் ஆகணும். ஏன்னா, விலைவாசி ஏறுது. அவங்க சம்பளம் அப்படியேதான் இருக்கு.”
“சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரை, ரசிகர்களுக்குத் தெரியாத ஏதாவது ஒரு விஷயம்?”
“எல்லோரும் ஃபைட் சீன்ஸ் மட்டும்தான் சண்டைப் பயிற்சியாளர்கள் எடுப்பாங்கனு நினைக்கிறாங்க. அப்படி இல்லை. படத்துல குட்டிக் குட்டியா வர்ற சேஸிங், பைக் ஓட்டுறது, கன்னத்துல ஓங்கி அறையுறது, ஓடிப்போய் பிடிக்கிற காட்சிகள்… இப்படிப் பல காட்சிகள்லயும் ஸ்டன்ட் டைரக்டரோட பங்களிப்பு இருக்கு.”

“அப்பா, நான், தம்பி… மூணு பேரும் ஃபைட் மாஸ்டரா இருக்கோம். பெரும்பாலும் செட்லதான் மீட் பண்ணுவோம். என் மனைவி கார்த்திகாவும் ஸ்டன்ட் மாஸ்டர் `கோல்டன் கோபால்’ சாரோட பொண்ணுதான். `ஜமீன்கோட்டை’ படத்துக்கு அவர்தான் ஃபைட் மாஸ்டர். சின்ன வயசுல இருந்தே கார்த்திகாவைத் தெரியும். எந்த பிரஷரையும் எனக்குக் கொடுக்க மாட்டாங்க. ரெண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிறாங்க.”
“என்னென்ன படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருக்கீங்க?”
“சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, சசிகுமாரின் `கொடிவீரன்’ படங்கள் முடிஞ்சது. இப்போ, விஷாலின் `இரும்புத்திரை’, வடிவேல் சாரின் `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ படங்களுக்கு வொர்க் பண்ணிக்கிட்டிருக்கேன்.”

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top