rajini 2.0

துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் கட்டணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிவாஜி, எந்திரன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர்-ரஜினி காம்போவில் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் தயாராகி வரும் படம் 2.0. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

400 கோடி ரூபாய் செலவில், மெகா பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாலிவுட்டின் அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

rajini 2.0

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம் ‘2.0’. இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் படம், பெரும் பொருட்செலவு, ரஜினி – அக்‌ஷய்குமார் இணைப்பு, ஷங்கர் இயக்கம் உள்ளிட்டவையே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.

தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமன்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதில், அவருடன் சேர்ந்து பிரபலமான பாடகர்கள்-பாடகிகள் பலர் பங்கேற்கின்றனர். அத்துடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட் கட்டணம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள விஜபி கட்டணம், 6 பேர் கொண்ட இருக்கைக்கு இந்திய மதிப்பில் 3,71,625 ரூபாயும், 8 பேர் கொண்ட இருக்கைக்கு 4,69,179 ரூபாயும், 12 பேர் கொண்ட இருக்கைக்கு 6,81,637 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி மாலை 5 மணி முதல் இரவு 11.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.