சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனை என்பதே தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஓபிஎஸ் மூலம் காலூன்ற பாஜக படுதீவிரமாக முயற்சித்தது. இதற்காக ஓபிஎஸ்-க்கு பலவகைகளிலும் முட்டுக் கொடுத்து ஆதரவு தந்தது டெல்லி.

ஓபிஎஸ் அவுட் ஈபிஎஸ் இன்

ஆனால் ஓபிஎஸ்ஸால் எந்த ஒரு கல்லையும் அசைத்துப் போட முடியவில்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டிக்கு இப்போது க்ரீன் சிக்னல் கொடுத்து தாங்கி வருகிறது டெல்லி.

ரஜினிகாந்துக்கு வலை

இதனிடையே நடிகர் ரஜினிகாந்தை வளைத்துப் போட்டு பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட. ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் இதனையே வலியுறுத்தினர்.

தனிக்கட்சி தொடங்கலாம்

ஆனால் ரஜினிக்கு நெருக்கமானவர்களோ, பாஜகவில் ஐக்கியமானால் கரைந்து போய் காணாமல் போக நேரிடும். அதனால் தனிக்கட்சி தொடங்குவோம்… தேர்தல் வெற்றி தோல்வியை சகஜமாக கருதி கட்சியை தொடர்ந்து நடத்துவோம் என ஐடியா கொடுத்துள்ளனர்.

அரசியலுக்கு வருகிறேன்…

இதனை முழுமையாக ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், சென்னையில் நேற்று ரசிகர்களிடையே பேசும்போது அரசியலுக்கு வரப் போகிறேன் என சூசகமாக அறிவித்தார். அத்துடன் தமிழக அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சிக்கவும் தொடங்கினார்.

அடிவாங்கிய ரஜினி சந்திப்பு

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது ரஜினியின் பேச்சு. இன்று 2-வது நாளாக ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆனால் இந்த சந்திப்பு விவகாரம் செய்தியாகாமல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் நடைபெறும் சிபிஐ சோதனை பிரதானமாகிவிட்டது.

காங். திமுக வளைக்கும் அச்சம்

டெல்லியைப் பொறுத்தவரையில் பாஜகவில் ரஜினி ஐக்கியமாக வேண்டும் என்பதுதான் விருப்பம். தனிக்கட்சி தொடங்கும் முடிவை டெல்லி ரசிக்கவில்லையாம். அப்படி ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் நிச்சயம் பாஜகவுடன் கூட்டனி அமைப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ப.சிதம்பரம் பேச்சை தட்டாத ரஜினிகாந்தை காங்கிரஸ் வளைக்கும்; அதேபோல் கூட்டணி பேரத்தால் திமுகவும் வளைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ரெட் சிக்னல்

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டாலும் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் உள்ள ரஜினிகாந்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலே இது எனவும் கூறப்படுகிறது. எங்களை பகைத்துக் கொண்டு எதுவும் செய்ய கூடாது என்ற எச்சரிக்கைதான் இந்த ரெய்டு எனவும் கூறப்படுகிறது.