Connect with us
Cinemapettai

Cinemapettai

விவேகம் படத்தை விமர்ச்சித்தவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ராகவா லாரன்ஸ், விஜய் மில்டன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவேகம் படத்தை விமர்ச்சித்தவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ராகவா லாரன்ஸ், விஜய் மில்டன்

உலகம் முழுவதும் சுமார் மூவாயிரம் திரையரங்கங்களில் வர்த்தகரீதியாக சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ‘விவேகம்’ படத்தைப் பற்றி சிலர் சிலாகித்து விமர்சனம் வெளியிட்டுள்ள வேளையில், பலர் ‘பிரித்து வேய்கிறோம் பேர்வழிகள்’ பாணியில் தாறுமாறாக விமர்சித்து வருவது அஜீத் ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படி தவறாக விமர்சிப்பவர்கள் ‘மேக்கிங் ஆப் சினிமா’ எனப்படும் சினிமா தொழிலுக்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது.

குறிப்பாக, இத்தகைய கலை விமர்சகர்கள் படத்தையும், தொழில்நுட்ப அம்சங்களையும் குறைகூறுவதுடன் மட்டுமில்லாமல், விவேகம் படத்துக்கு நல்ல முறையிலான விமர்சனப் பார்வை வெளியிட்டுள்ள ஊடகங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும் ‘வாட்ஸ் அப் குரூப்’களின் மூலம் தரக்குறைவாக நைய்யாண்டி செய்து வெளியிட்டுள்ள கருத்துகள் சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புடைய பலரை முகம்சுளிக்க வைத்துள்ளது.
இதற்கிடையே, இத்தகைய விமர்சனக் கணைகள் எங்கிருந்து பாய்கின்றன? என்ற கேள்விக்கு பின்னால் ஒரு மர்ம முடிச்சும் இருப்பதாக கோலிவுட்டில் பழம்தின்று கொட்டைப்போட்ட விமர்சகர்கள் கருதுகின்றனர். அதன் பின்னணியில் ‘வைட்டமின் M’ மறைந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுவாக, ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் பத்திரிகையாளர்களுக்கு அந்தப் படத்தை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. பல ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பது, படத்தைப் பற்றிய ‘குட் டாக்’ (நல்ல அபிப்ராயம்) ஏற்படும் வகையில் சில கட்டுக்கதைகளை கிளப்பிவிட அவர்களின் மூலமாக கையூட்டு அளிப்பது போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் நிகழ்வது திரையுலகம் சார்ந்த தவிர்க்க இயலாத சம்பிரதயமாக இருந்து வருகிறது.

ஆனால், விவேகம் படக்குழுவினர், அதிவிவேகத்துடன் இத்தகைய சம்பிரதாயங்களை புறக்கணித்து விட்டதால், அடுத்தடுத்து புதுப்படம் திரையிடுபவர்களும் இதே பாணியை கடைபிடித்து தங்களது வயிற்றில் மண்ணை அள்ளிப்போடாமல் இருக்க வேண்டும் என்ற வெறியுடன் ‘விவேகம்’ படத்தை குறிவைத்து தற்போது இந்த விமர்சனக் கணைகள் தொடுக்கப்படுவதாக பரவலான ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
முன்பெல்லாம், ஒரு படம் ரிலீஸ் ஆனால் பிரபல பத்திரிகைகளின் சினிமா பிரிவு ஆசிரியர்களுக்கு என பிரத்யேக காட்சிகள் திரையிடப்படும். அதன் அடிப்படையில் நாளிதழிலோ, வார-மாத இதழ்களிலோ அந்தப் படத்தின் உண்மையான நிறை, குறைகளை ஆய்வு செய்து விமர்சனங்களும், திறனாய்வுகளும் முன்வைக்கப்படும். இத்தகைய விமர்சனங்கள் ரசிகர்கள் சில நல்லப் படத்தை ஊக்குவிப்பதற்கான காரணிகளாக அமைந்ததுண்டு.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் திருட்டு வி.சி.டி.க்கள் மற்றும் கள்ளத்தனமாக புதியப் படத்தை வெளியிடும் இணையதளங்களில் வழியாக ‘சுடச்சுட’ செலவில்லாமல் புதுப் படங்களை பார்ப்பவர்கள் எல்லோருமே சமூக வலைத்தளங்களின் வழியாக மனம்போனப் போக்கில் ஒரு படத்தை ‘பிரித்து மேய்வது’ என்பது காலமாற்றத்தோடு கலந்துப்போன அநாகரிகம் என்று நடுநிலையாளர்கள் எண்ணுகின்றனர்.

இந்நிலையில், ’விவேகம்’ படத்தைப் பற்றி வெளியாகிவரும் எதிர்மறையான விமர்சனங்கள் திரைப்படத்துறையை சேர்ந்த பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தாலும் ‘சின்னக்கல்’ என்று இந்த விமர்சகர்களை அனைவரும் புறந்தள்ளி விட்டு அவரவர்கள் தங்களது தொழிலை கவனித்து வருகின்றனர்.

 

எனினும், அளவுக்கதிகமாக தரம்தாழ்த்தி விமர்சித்த சிலர்மீது தைரியமாக கல்லெறிய நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் டைரக்டர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் தற்போது முன்வந்துள்ளனர்.

 

இவ்விவகாரத்தில் முதன்முதலாக கருத்து தெரிவித்த டைரக்டர் விஜய் மில்டன் கூறியுள்ளதாவது:-

சினிமாவை விமர்சனம் செய்வதற்கு ப்ளூ சட்டைப் போட்டால் போதும் என்றால், ப்ளூ சட்டைப் போட்டவரை விமர்சனம் செய்வதற்கு சினிமாக்காரனாக இருந்தால் போதுமானது. அண்ணா.. வணக்கம். உங்களுடைய ‘விவேகம்’ விமர்சனம் பார்த்தேன். ஏதோ பேசுகிறார் என்று ஒதுக்கிற அளவுக்கு தற்போது நீங்கள் இல்லை. 6 லட்சத்தைக் கடந்து உங்களுடைய வீடியோ போய் கொண்டிருக்கிறது.

 

சினிமா எடுப்பது என்பது ஒரு குழந்தை பெற்றெடுப்பது மாதிரி. அனைவருமே நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அதற்காக முடிந்தவரை போராடுகிறோம். 10 மாதம் காத்திருக்கிறோம். நல்ல புத்தகம் படித்தால் குழந்தைக்கு புத்தி வரும் என நினைக்கிறோம். அனைத்துமே சரி தான். ஆனால், 10-வது மாத முடிவில் குழந்தை வெளியே வரும் போது அனைவருமே டென்ஷன் தான். ஏனென்றால் அது எப்படி வரும் என்பது நமது கையில்லை. ஆனால், நமது முயற்சி 100% நேர்மையானது.
வாய்க்கு வந்த மாதிரி ‘என்னடா கதை அது’, ‘வெட்கப்படுகிறாயா.. அவங்களே வெட்கப்படாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றெல்லாம் பேசக்கூடாது. அது தவறு. வெட்கப்படுவதற்காகவா நாங்கள் படம் எடுக்கிறோம். அதற்காகவா ஒன்றரை ஆண்டுகள் செலவு செய்கிறோம். அஜித் சார், சிவா சார் மற்றும் சத்யஜோதி தியாகராஜன் சார் ஆகியோருக்கு தெரியாதா? வெட்கப்படுவதற்கும், வேதனைப்படுவதற்கும் ஒன்றரை ஆண்டுகள் படமெடுக்கவில்லை.

படத்தின் வெளிப்பாடு என்பது மிகப்பெரிய ரசாயன மாற்றம். அப்படி ஒரு குழந்தையை சரியாக பெற்றெடுப்பது என்பதை இதுவரை யாருமே கற்றுக் கொள்ளவில்லை. 100 படம் செய்த பாலசந்தர் சார், சினிமாவைப் புரட்டிப் போட்ட பாரதிராஜா சார் உள்ளிட்ட யாருமே கற்றுக் கொள்ளவில்லை. அனைவருமே வெற்றி, தோல்வி மாறி மாறி கொடுப்பதற்கு காரணம் என்னவென்றால், அது வேறொரு வித்தை.

நாம் செடி வைக்க முடியும், தண்ணீர் ஊற்ற முடியும் உள்ளிட்ட அனைத்துமே செய்ய முடியும். ஆனால், பூ இந்த மாதிரி பூக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யவே முடியாது. ஒரு திருமண ஜோடிக்கு கை – கால் குறையோடு குழந்தை பிறந்துவிட்டால் இப்படித் தான் கிண்டல் செய்வோமா. அப்படியல்ல.

சினிமாவை நம்பி நாங்கள் வியாபாரம் செய்கிறோம். நீங்களும் அதையே தான் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓரளவுக்கு மனம் புண்படும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். இதை இப்படி செய்திருக்கலாம் என்ற ஒரு வார்த்தை உங்களுடைய விமர்சனத்தில் இருக்கிறதா?. நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் என்ன.. ?

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல், ‘பொறுத்தது போதும் – பொங்கி எழு’ பாணியில் இன்று பிற்பகல் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

’அஜீத் சாரின் ‘விவேகம்’ படம் பார்த்தேன். அந்த கடுமையான உழைப்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!. அதேவேளையில், இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு மக்கள் நிறையாகவும், குறையாகவும் அளித்துள்ள அனைத்து விமர்சனங்களையும் கண்டேன். ஆனால், நீலச் சட்டை மாறன் என்பவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தை கண்டு வலியும், வேதனையும் அடைந்துள்ளேன்.

இந்தப் படத்தில் உள்ள சிலாகிக்கத்தக்க காட்சிகளைப்பற்றியும், இதற்கான படக்குழுவினரின் உழைப்பைப் பற்றியும் அவர் ஒருவார்த்தைகூட கூறவில்லை. அவரது கருத்துகள் படத்திற்கான விமர்சனம்போல் தோன்றவில்லை, மாறாக, நடிகர் அஜீத் குமார் மற்றும் அவரது ரசிகர்கள்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இது உள்ளது.

எனவே, சினிமாவைப் பற்றி விமர்சனம் செய்யும் தகுதிபெறாத நீலச்சட்டை மாறன்மீது திரையுலகை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என தனது முகநூல் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top