கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம்பெறுவதில்லை.

எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்? எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்.

மக்கள் தொகையில் அதிகப்படியாக ஆண்கள்

2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர்.

இந்த அதிகபட்ச சமச்சீரின்மைக்கு காரணம், கத்தார் மக்கள் தொகையில் எழுந்த திடீர் எழுச்சியாகும். கத்தாரில் அதிகப்படியான குடியேறிகள், அதுவும் அதிகபட்சமாக இளம் ஆண்கள் உள்ளனர்.

கத்தாரில் வேலைவாய்ப்புகளில் உத்தரவாதம் இருப்பதால் சமீப வருடங்களாக மக்கள் அதிகமாக கத்தாருக்கு படையெடுத்து வருகின்றனர்.

எனவே 2003 ஆம் ஆண்டில் 7 லட்சமாக இருந்த மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கத்தாரில் பெண் குடியேறிகளும் இருக்கிறார்கள்; ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டிகளுக்கான கட்டட வேலைகளில் ஈடுபடுவதற்காக அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் கத்தாருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் உலகமுழுவதிலிருந்து குறிப்பாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறார்கள். இஸ்லாம் மற்றும் கிறித்துவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்துக்கள் உள்ளனர்.

வேலைக்கான உத்தரவாதம் மற்றும் நல்ல எதிர்காலம் இருப்பினும் வேலைக்காக வந்தவர்கள் மோசமான நிலைகளில் பணிபுரிய வற்புறுத்தப்படுவதாகவும் அதில் பாதிக்கும் அதிகமானோர் நாட்டைச் சுற்றியுள்ள தொழிலாளர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கத்தார் தங்களது பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உறுதியளித்த போதிலும், பணியாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தலை சந்திப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.