அஜீத் விஜய் படங்களாக இருந்தாலும் கூட, பஞ்சாயத்து இல்லாமல் வெளிவரவே வராது போலிருக்கிறது. சொன்ன பட்ஜெட்டை விட கூடுதல் செலவு. வருஷக்கணக்கில் கிடப்பில் போட்டதால் வந்த வட்டி குட்டி கணக்கு என்று சுமை மேல் சுமை சேர்த்துக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் நேரத்தில் ரத்தக்கண்ணீர் வடிப்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோடம்பாக்கத்தில் நிலவும் அவலம்! இதில் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிருக்கு மட்டும் என்ன ? வழக்கம் போல பஞ்சாயத்து கூடி விட்டது. கடந்த மூன்று நாட்களாக ஆக்ஷன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது பட ஏரியாவில்.

முதலில் ‘மெல்லிசை’ என்று துவங்கப்பட்ட படத்தைதான் ‘புரியாத புதிர்’ என்று பெயர் மாற்றினார்கள். தனது நண்பருக்காக இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, கடைசி நேர கசமுசாவில் மனம் இரங்கி, தனது சம்பளத்தில் சுமார் இரண்டு கோடியை விட்டுக் கொடுத்தாராம். அவ்வளவு பெரிய தொகையை விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதியை புகழ்வதுதானே சரியாக இருக்கும்?

நடந்தது அதற்கு நேர்மாறு. “சார்… இன்னும் இரண்டு கோடி கொடுத்தா படத்தை ரிலீஸ் பண்ணிடலாம். கொடுக்கலேன்னா உங்க படம் வராது. ஒரு பெரிய ஹீரோவின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படம், சொன்னபடி வரலேன்னா உங்களுக்குதான் அசிங்கம்” என்று அணை கட்டினார்களாம். சுதாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி, “வரவேண்டிய ரெண்டு கோடி பணத்தையே வேணாம்னு சொல்றேன். அதற்கப்புறமும் பணம் கேட்டால், அதுக்கு பேர் வேற…” என்று கடுப்பாகியிருக்கிறார். “என் படமே வரலேன்னாலும் பரவாயில்ல. நான் விட்டுக் கொடுத்த அந்த இரண்டு கோடியை எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க” என்று கூறிவிட்டார். அந்தப் பணத்தை வாங்கித் தரும்படி நடிகர் சங்கத்திற்கு ஒரு புகார் கடிதத்தையும் கொடுத்துவிட்டு தனது செல்போனை ஆஃப் பண்ணிவிட்டார்.

அதற்கப்புறம் எல்லாமே மாறிப் போய்விட்டது . வேறு வழியில்லாமல் படம் பொங்கல் ரிலீசிலிருந்து பின் வாங்கியும் விட்டது.