ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்திருந்தது.

மீதம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய அஸ்வின், ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தியதால் 260 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 6 ரன்களிலும் கேப்டன் கோஹ்லி ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழக்கவே இந்திய அணி தடுமாறினாலும் கோஹ்லியை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் தொடர்ந்து நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார்.

ராகுல் – ராஹானே ஜோடி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் ஓ கெஃபே வீசிய ஆட்டத்தின் 32 ஓவர் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை தகர்த்து எறிந்தது.

ஓ கெஃபே வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் கே.எல் ராகுல் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அதே ஓவரின் மூன்றாவது பந்தில் ராஹானேவும் கடைசி பந்தில் அஸ்வினும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பேட்ஸ்மேன்களே ரன் அடிக்கவில்லை நாங்கள் மட்டும் ஏன் அடிக்க வேண்டும் என்பது போல் இந்திய வீரர்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிவே இந்திய அணி 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஓ கெஃபே 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்திய அணி 155 ரன்கள் பின்தங்கியுள்ளது.