கன்னியாகுமரி: மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மாநில நெடுஞ்சாலையில் மூடப்பட்ட மதுக் கடையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தக்கலை அருகே ஆலங்கோடு சாலையோரம் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதையடுத்து, அந்த கடையை கீழக்கல்குறிச்சி என்ற இடத்திற்கு மாற்ற முயற்சி மேற் கொள்ளப்பட்டது. ஆனால் அங்கும் மதுக்கடைக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் ஆலங்கோடு சாலையில் உள்ள மதுக்கடையை திறக்க முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், சாலையோரத்தில் நின்றபடி போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை திறக்கப் போவதில்லை என்று உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.