500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போய்விட்டதால் நடிகர், நடிகைகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு சம்பளம் காசோலை வடிவில் அளிக்கப்படுகிறது. மேலும் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும் அறிவித்தார் சினிமா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக் கணக்கில் கையில் பணம் வைத்து புழங்கும் சினிமாக்காரர்களுக்கு மோடியின் அறிவிப்பால் சங்கடம் ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்புக்கு வரும் நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள், தொழிலாளர்களுக்கு ரொக்கமாக சம்பளம் கொடுக்கப்படும். இதனால் சம்பளம் கொடுக்க மட்டும் தயாரிப்பாளர்கள் தினமும் ரூ.5 லட்சமாவது கையில் ரொக்கமாக வைத்திருப்பார்கள். மோடியின் அறிவிப்பால் ரொக்கம் கொடுக்க முடியாமல் பல படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரொக்கத்திற்கு எங்கே போவது என்று சில தயாரிப்பாளர்கள் சம்பளத்தை காசோலையாக வழங்கத் துவங்கியுள்ளனர். நடிகர், நடிகைகளுக்கு மட்டும் அல்ல சமையல்காரர்கள், பாதுகாவலர்கள், டீ, காபி கொடுப்பவர்கள் என அனைவருக்குமே காசோலையாக சம்பளம் வழங்கப்படுகிறது.

ரொக்கத்தை புழங்க முடியாத நிலையால் புதிய படங்களின் துவக்க விழா, இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தணிக்கை முடிந்துள்ள 50க்கும் மேற்பட்ட படங்களை வாங்க ஆள் இல்லாமல் உள்ளது.

சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தவர்கள் தற்போது பணம் தர மறுக்கிறார்கள். நிதிப் பிரச்சனையால் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் கூட நடக்காமல் உள்ளது.

500, 1000 ரூபாய் செல்லாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கையில் செலவுக்கே சில்லரை இல்லாததால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்வது இல்லை. இதனால் தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காத்து வாங்குகின்றன. கூட்டம் இல்லாததால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.