கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான நம்ம அணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக அந்த அணி சார்பில் போட்டியிட்ட தலைவர் விஷால் 476 வாக்குகள் பெற்று, 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.

பொருளாளராக எஸ்.ஆர்.பிரபுவும், செயலாளராக கே.ஈ.ஞானவேல்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மொத்தமாக 21 பேர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். வெற்றி பெற்ற அனைவரும் நாளை நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், அலாவூதீன் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தபோது நடிகர் விஷால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அலாவூதீன் போட்டியிட்டதாகவும் கூறப்படுகிறது.