பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். டெபாசிட் பணத்தை ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பான்கார்டு இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணம் மதிப்பு இழப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மனுவிற்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், நவம்பர் 9-ம் தேதிக்கு பின் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தோர் பான்கார்டு எண் தராமல் பணம் எடுக்க முடியாது என்றும், பான்கார்டு அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்றும், வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருக்க வேண்டும் என்றால் பான்கார்டு அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பழைய 500, 1000 நோட்டுகளை பயன்படுத்த அவகாசம் அளிப்பது குறித்த வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளிக்க உள்ளது.