Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய லேடி சூப்பர்ஸ்டார்..
ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் பிரியங்கா சோப்ரா விபத்தில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். சமீபத்தில், சர்வதேச அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம் ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பிரியங்கா சோப்ராவிற்கு 12வது இடம் கிடைத்து இருக்கிறது. பாலிவுட்டில் சல்மான்கானுடன் பாரத் படத்திலும், சுசாந்த் சிங் ராஜ்புட்டுடன் குஷ்டகியான் படத்திலும் நடித்து வருகிறார்.
இதைப்போல, ஹாலிவுட்டில் இஸ் நாட் இட் ரொமாண்டிக், ஏ கிட் லைக் ஜேக் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். தொடர்ந்து, அமெரிக்கா பிரபல தொலைக்காட்சி தொடரான குவான்டிகோவில் நடித்து வருகிறார். அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்.பி.ஐ ஏஜெண்டாக நடிக்கிறார். முதல் இரண்டு சீசனை வெற்றிகரமாக முடித்த குழு, தற்போது சீசன் 3 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பிரியங்கா சோப்ரா பரபரப்பாக கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், குவாண்டிகோ ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டது. இதில் நடித்து கொண்டு இருந்த பிரியங்காவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், 3 வாரத்திற்கு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் படப்பிடிப்புகளுக்கு லீவ்விட்டு இருப்பதாக ப்ரியங்கா தனது டுவிட்டரில் டுவீட் தட்டி இருக்கிறார்.
இதே நேரத்தில், மே 19 ஆம் தேதி இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதில், இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா மட்டுமே விருந்தினராக அழைக்கப்பட்டு இருக்கிறார். மெர்க்கலுக்கு மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா இருப்பார் என தகவல்கள் வெளியாகியது. ஆனால், இதை பிரியங்கா மறுத்து விட்டார். இருந்தும், தன் தோழி திருமணத்தில் இணைய இருப்பது மகிழ்ச்சி எனவும் டுவீட் தட்டி இருக்கிறார். இந்த விபத்தால் கிடைத்து இருக்கும் இடைவேளையில், திருமணத்தில் பிரியங்கா நிச்சயம் இருப்பார் எனப் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
