இந்தியாவில் காதலியுடன் சேர்த்து வைக்க உதவுமாறு பிரதமர் மோடிக்கு வாலிபர் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நிகழும் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

இக்கடிதங்களை மேற்பார்வையிட பிரதமர் அலுவலகத்தில் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவகாரங்கள் மட்டுமின்றி பிரதமருக்கு அடிக்கடி சுவாரஸ்யமான கடிதங்களும் அவ்வப்போது அனுப்பப்படுகின்றன.

உதாரணத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பிரதமருக்கு வினோதமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ‘இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு, நான் ஒரு பெண்ணை மனதாரக் காதலிக்கிறேன். ஆனால், இதனை பெண்ணின் பெற்றோர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

நீங்கள் சண்டிகர் நகருக்கு வருகை தரும்போது என்னுடைய காதலியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்’ என வாலிபர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகவலை பிரதம அலுவலக அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், இதுபோன்று காதலுக்காக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது இதுவே முதல் முறை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.