புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அஜித்துக்கு பாராட்டு, விஜய்க்கு ஆதரவு.. சீமானுக்கு எதிர்ப்பு? ஒரே கல்லில் ட்ரிபிள் கோல் அடித்த சத்யராஜ்

சென்னை அடையாறு முத்தமிழ் சிவாஜி பேரவை நினைவிடத்திற்கு அருகில் திராவிட இயக்கத் தமிழர்பேரவை சார்பில் நடந்த திராவிடமே தமிழுக்கு அரண் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்ற நடிகர் சத்யராஜ், எனக்கு 15 வயதிருக்கும் முத்தமிழர் கலைஞரின் பராசக்தி பட வசனத்தைக் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. அப்போதே கலைஞர் மீதும் காதல் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

அஜித்தை பாராட்டிய சத்யராஜ்

மேலும், தம்பி அஜித்குமார் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பைக்கில் டூர் போவதைப் பற்றிய வீடியோவில் கூறியிருந்தார். அதில், சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால், அதற்குக் காரணம் மதம்தான். பிறநாட்டுக்குச் செல்லும்போது, நமக்கு எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. ஆனால், மதம்தான் தேவையின்றி வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகாகத் தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு மறைமுக ஆதரவு, சீமானுக்கு எதிர்ப்பு

அதற்கு என்னுடைய பாராட்டுகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ் விஜய்க்கும் மறைமுகமாக அவர் ஆதரவு அளித்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தவெக முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ்த்தேசியம் இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு, நாம் தமிழர் கட்சி சீமான் அவரை கடுமையான விமர்சித்ததுடன், திராவிடம் தமிழ்த் தேசியமும் எப்படி ஒன்றாகும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில், சத்யராஜ் ‘ஈழ விடுதலைக்கு பெரும் உத்வேகம் அளித்தும் திராவிட இயக்கங்கள்தான். தமிழ்த் தேசியம் ஆரியத்தைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல’ என்று சீமானின் கருத்துக்கு எதிராக தெரிவித்துள்ளார்.

இதற்கு சீமான் எப்போது பதிலடி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் சத்யராஜ் வெகு சாமர்த்தியமாக பேசக்கூடியவர் என்பதால் நாம் தமிழர் கட்சியினர் அவரது கருத்துக்கு விமர்சனம் கொடுப்பார்களா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


- Advertisement -

Trending News