6 முறை போட்டி போட்டு களமிறங்கிய ரஜினி-கமலின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு பெரும் ஆளுமைகள் எப்போதுமே இருப்பது வாடிக்கை. எம்ஜியார்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஜோடிகளில் அதிகம் மோதிக்கொண்டதும், பலத்த போட்டி நடைபெற்றதும், நடைபெறுவதும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருக்கும் இடையில் தான். இவர்கள் இருவரும் இதுவரை 14 படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்துள்ளனர். எப்படியும் அதில் ஒரு படம் தான் மாபெரும் வெற்றி பெற்று இருக்கவேண்டும். ஒருவேளை இரண்டு படங்களும் சிறப்பாக இருந்தாலும், வசூலை வைத்தோ படத்தின் தரத்தை வைத்தோ ஒரு படத்தை உயர்த்தியும், மற்றொன்றை சாதாரணமாகவோ மதிப்பீடு செய்வது என்பது மனித இயல்பு. அப்படி இவர்கள் இருவருக்குள்ளும் நடந்த இந்த 14 திரைப்பட பந்தயத்தில் வெற்றி பெற்ற படங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

தங்கமகன் – தூங்காதே தம்பி தூங்காதே (1983):  1983ஆம் வருடம் தொடங்கியது இவர்கள் இருவருக்குல்லம் நடைபெற்ற வசூல் போர். அதனை துவங்கி வைத்தது இந்த படங்களே. ஆரம்பமே இருவருக்கும் சிறப்பாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ரஜினி நடித்த தங்கமகன் படமும் சரி, ஏவிஎம் நிறுவனத்திற்காக கமல் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய இரண்டுபடங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிக்கு ஜோடியாக பூர்ணிமாவும், கமலுக்கு ஜோடியாக ராதா மற்றும் சுலக்ஷனா. படத்தை இயக்கியவர் எஸ்.பி. முத்துராமன். இரண்டு படங்களுமே 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

நல்லவனுக்கு நல்லவன் – எனக்குள் ஒருவன் (1984): நல்லவனுக்கு நல்லவன் படத்தை ஏவிஎம் நிறுவனத்திற்காக இயக்கி இருந்தார் எஸ்.பி.முத்துராமன். அவருக்கு ஜோடியாக ராதிகா. உழைத்து முன்னேறும் ரஜினி, அவரது மகளுடன் ஏற்படும் பாசப்போராட்டம் என்று அன்றைய ரசனைக்கு ஏற்ப அமைந்தது இந்த படம். அதனால் 150 நாட்களுக்கு மேல் மாபெரும் வெற்றிபெற்றது. பாடங்கள் எல்லாமே இளையராஜா இசையில் மாபெரும் வெற்றிபெற்றன. படத்திற்கு திரைக்கதை அமைத்தவர் நடிகர், வசனகர்த்தா விசு.

மறுபக்கம் கமல் நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படம் மக்களை வெகுவாக கவரவில்லை. ஒரு கமலின் உடம்பிற்குள் இன்னொரு கமல் புகுந்து கொள்வது போன்று அமைக்க பட்ட கதையும், கராத்தே சண்டையும் மக்களுக்கு புதிதாக இருந்தது. பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்த போதும், படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனபோதும் இந்த படம் ஒரு ஹிட் அந்தஸ்தை பெற்றது. இந்த படத்தையும் எஸ்.பி. முத்துராமன் அவர்களே இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் சிகப்பு மனிதன் – காக்கி சட்டை (1985): நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி இருந்தார். ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு இசை இளையராஜா. தங்கையின் கற்பை சூறையாடியவர்களையும், அம்மாவின் சாவிற்கு காரணமானவர்களையும் பழி வாங்கும் கதை. பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பாக்யராஜ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதே நேரத்தில் கமல்ஹாசன் நடித்த காக்கிசட்டை திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்தது. ராஜசேகர் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். போலீசில் சேரவேண்டும் என்று தயார் படுத்திகொண்டு இருக்கும் நாயகன், அண்டர் கவர் பெயரில் வில்லன் உடன் பயணிப்பது போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம். பாடல்கள் எல்லாம் மாபெரும் வெற்றி. படம் 200 நாட்களுக்கும் மேல் வெற்றிநடை போட்டது.

படிக்காதவன் – ஜப்பானில் கல்யாணராமன் (1985): ரஜினி, அம்பிகா, சிவாஜி, நாகேஷ், மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். சிவாஜி கணேசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிக்கு அண்ணனாக நடித்தது பலருக்கும் பிடித்திருந்தது. பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட், கரணம் இளையராஜா. 250 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய இந்த படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்தனர் என்றால் அது மிகை அல்ல. இந்த படத்திலேயே ரஜினியும் ரம்யா கிருஷ்ணனும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

கல்யாணராமன் படம் பெரும் வெற்றி பெற்ற காரணத்தால் அதன் இரண்டாம் பாகம் போல தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது தான் ஜப்பானில் கல்யாணராமன். ஜப்பானில் இந்த திரைப்படம் அதிகமாக எடுக்கப்பட்டதும், முதல் பாகதில் இறந்து போன கல்யாணராமனின் ஆவி வருவதும் என்று படம் மக்களை மகிழ்விக்க தவறவில்லை. பாடல்கள் எல்லாம் வெற்றி பெற்றன, மீண்டும் இளையராஜா. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இந்த படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது. கௌண்டமணி, கோவை சரளா நகைச்சுவை இந்த படத்தின் இன்னொரு அடையாளம்.

மாவீரன் – புன்னகை மன்னன் (1986): ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்ஷ்ங்கர் மற்றும் பலர் நடித்த திரைப்படம் மாவீரன். மர்ட் என்கிற அமிதாப்பச்சன் நடித்த இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். வெள்ளையர்கள் ஆட்சி செய்துகொண்டு இருந்த காலகட்டத்தில் இருப்பது போன்ற ஒரு கதையமைப்பை கொண்ட இந்த திரைப்படம், ஓரளவுக்கே மக்களை கவர்ந்தது. பாடல்கள் பெரிதும் கைகொடுத்த காரணத்தால் இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

இதே நேரம் கமல்ஹாசன் நடித்து, அவரது குருநாதர், கே.பி. இயக்கிய புன்னகை மன்னன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜா தான். ஆனாலும் இந்த படத்திற்கு அவர் கொடுத்தது உலகத்தர இசை. காதல், தோல்வி, மீண்டும் காதல் என்று புதிய அணுகுமுறையை இந்த படம் சொல்லி இருந்தது. சாப்ளின் செல்லப்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கமலை தான் பலருக்கும் பிடித்திருந்தது. இந்த படத்தின் இறுதி காட்சியை சாகும்வரை கே.பி. பார்க்கவில்லை என்று கூறுவார்கள். இந்த படம் 25 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

மனிதன் – நாயகன் (1987): இந்த வருடம் தமிழ் சினிமாவின் முக்கியமான வருடம் என்று கூறலாம். இந்த படத்தில் இருந்து கமல் தனது சினிமாவை ஆராய்ந்து, வித்தியாசமாக தெரிந்து எடுத்து நடிக்க ஆரமித்தார் எனலாம். ஏவிஎம் நிறுவனத்திற்காக, எஸ்.பி.முத்துராமன் இயக்க ரஜினிகாந்த், ரூபிணி நடித்திருந்த திரைப்படம் மனிதன். இளையராஜாவுடன் உரசல்கள் ஆரமித்த சமயம் அது. அதனால் படத்திற்கு சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். ரஜினியின் மாபெரும் ரசிகர் கூட்டத்தினால் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. 175 நாள் காட்சிகளாக பல தெட்டேர்களில் வெற்றிவாகை சூடியது.

நாயகன், என்னும் வித்தியாசமான திரைப்படத்தை மணிரத்னமும், கமல்ஹாசனும் நமக்கு கொடுத்தனர். மும்பையை கலக்கிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தோள் கொடுத்தவர்கள் பிசி.ஸ்ரீராம் மற்றும், இசையமைப்பாளர் இளையராஜா. பல பத்திரிகையாளர்களால் பாராட்டப்பட்ட இந்த திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி 175 நாட்கள் கடந்து வெற்றிபெற்றது. முதலில் இந்த படத்திற்க்கு சான்றிதழ் தர சென்சார் அமைப்பு மறுத்துவிட்டது. பின்னர் வரதராஜ முதலியாரின் அனுமதி பெற்ற கடிதத்தில், இப்படம் அவரது வாழ்க்கை வரலாறு அல்ல என்று உறுதி அளித்தபின் இந்த படம் ரிலீஸ் ஆனது.

1987ஆம் ஆண்டோடு கமல்ஹாசன் தனது போக்கை மாற்றிக்கொண்டார். ரஜினிகாந்த் தொடர்ந்து தான் போட்டு வந்த வெற்றிப்பாதையில் முழுவதுமாக கவனம் செலுத்தினார். மீதமுள்ள படங்களை இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம். தொடரும்..

Next Story

- Advertisement -