சில காலங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையிலிருந்த ‘பொன்னியின் செல்வன்’ நிலை என்ன என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இறுதிகட்டப் பணிகளை முழுமையாக முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே, ஏப்ரல் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்துக்காக மணிரத்னம் அளித்த பேட்டியில் ‘பொன்னியின் செல்வன்’ படம் என்னவானது என்று பதிலளித்துள்ளார். அதில், “அது கனவுப் படம் என்று சொல்ல முடியாது. எல்லா இயக்குநர்களுக்கும், ஒரு படம் சாகசமாக செய்ய வேண்டும் என்ற விருப்ப இருக்கும். அந்த மாதிரி தான் எனக்கு ‘பொன்னியின் செல்வன்’ கதையும் இருந்தது. சின்ன வயசுலேருந்து படித்துப் பார்த்து பிரமித்த கதை. அதை திரையில் கொண்டு வர முயற்சி செய்தேன். அது சரிவர அமையவில்லை. அதனால் அப்படத்தை கைவிட்டுட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.