நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அதிலும் சமீபத்தில் இளைஞர்கள் தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு தொடர்பான எழுச்சி போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வந்தார். அதேப்போன்று வன்முறை சம்பவம் நடந்தபோதும் தனது கண்டனத்தை தெரிவித்து வந்தார். தொடர்ந்து அரசின் செயல்பாடுகளும் குறித்தும் டுவிட்டரில் கமல் பதிவிட்டு கொண்டே வருகிறார்.

கமலின் இந்த செயல்பாடுகளை எல்லாம் பார்த்துவிட்டு சிலர் அவரை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் தனக்கு சரிப்பட்டு வராது என்று சொல்லி வருகிறார். இந்நிலையில் அவரை சிலர் மீண்டும் அரசியலுக்கு அழைப்பு விடுத்ததை எண்ணி டுவிட்டரில் கொஞ்சம் கோபமாகவும், அதேசமயம் நொந்துபோயும் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அதில் கமல் கூறியிருப்பதாவது… ‛‛கேள் தோழனே, நண்பனே, ஆசானே, மூடபக்தனே… உன்னுடன் நிற்கத்துணிந்த எனை அரசியல் தலைவருடனா சேரச்சொல்வாய்? எப்பிழை செய்தேன் இவ்விகழ்வெனைச்சேர? நொந்தேனடா” என்று கூறியுள்ளார்.

அதாவது, “உங்களுக்கு துணையாக இருந்ததற்கு என்னை அரசியலில் சேரச் சொல்வதா… நான் என்ன தவறு செய்தேன். மனது வேதனைப்படுகிறது” என்று சொல்லியிருக்கிறார் கமல்.