மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று கூடலாம் என்று தகவல் பரவியதை அடுத்து களங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா கடற்கரையில் கூட்டம் போடக்கூடாது என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்த வருமாறு இளைஞர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் செய்தி களை சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் எந்த போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என கடந்த 10 ஆண்டுக்கு மேலாக தடை உள்ளது. குறிப்பாக, கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் எந்த அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ போராட்டங்கள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாநகரின் முக்கிய சாலைகளில் பேரணிகள் நடத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. எனவே, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோரை நம்பி யாரும் செல்ல வேண்டாம்.

மெரீனா கடற்கரை பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான இடம் மட்டுமே. எனவே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும், அதை கேட்டு வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மெரீனாவில் ஒன்று கூட இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுவதாக கூறி கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை நூற்றுக்கணக்கான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.