கரூர்: முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குச்சிப்பளையத்தில் மருத்துவக் கல்லூரி கட்ட ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னும் வேலை தொடங்கப்படவில்லை என அதிமுக அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி அண்மையில் புகார் தெரிவித்திருந்தார். இத் திட்டம் செயல்வடிவம் பெறாததற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் நடவடிக்கையைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அவரது போராட்டத்துக்கு அப்போது அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பதிலாக வாங்கல் பகுதியில் உண்ணாவிரம் இருக்க அவருக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

அதேபோல், செந்தில்பாலாஜிக்கு போட்டியாக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த நெடுஞ்செழியனுக்கும் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் புகாருக்கு விளக்கமளித்த அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டுமென்பதே எனது விருப்பம். மருத்துவக் கல்லூரி கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் தான் கட்டுமானப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்றார்.