மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பணமோசடி புகார் தரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அவரைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்டதாகக் கூறி, அவரது அண்ணன் ஜெயச்சந்திரன் மகளான தீபாவை தனிக்கட்சி தொடங்கும்படி, பல தரப்பினரும் வலியுறுத்திவந்தனர். இதையடுத்து, அவர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில், ஜெ.தீபா வேட்பாளராகவும் களமிறங்கினார். எதிர்பாராவிதமாக, அந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர் விண்ணப்பப் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராம் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதன்பேரில் தீபா மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.