வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

“நல்லவன் வாழ்வான்” படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய “எதையும் தாங்கும் இதயம்” படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

“உன் அன்னை முகம் என்றெண்ணி – நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி – நான் உன்னை முகம் பார்க்கின்றேன்” என்பதுதான் அந்தப்பாடல்.

கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.

இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.

வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.

ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.

“வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்… ஏறு, என் வண்டீல…” என்று கையைப்பிடித்து இழுத்தார்.

“அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே…. பாட்டு எழுதற வேலைதான் வேணும்!” என்று வாலி சொன்னார்.

“பாட்டு எழுதுற வேலைதாண்டா… கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு… அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு… உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு…” என்று வெங்கடேஷ் கூறினார்.

உடனே வாலி, “அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்… டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க…” என்றேன்.

ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.

“நீ உருப்படமாட்டேடா” என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

“கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.

ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட… அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.

விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு.

தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.

இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.