தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகவும், இது குறித்து சோதனை நடத்த தனியார் நிறுவன பால் மாதிரிகளை சோதனை கூடங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஏ.பி.சூர்ய பிரகாசம் என்பவர், தனியார் பால் கலப்பட சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்விடம் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் பால் கலப்பட குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜுன் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

”அரசு மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் கொள்ள வேண்டும். எனவே கலப்படம் உள்ள பாலை மக்கள் பயன்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தனியார் பாலில் தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இந்த குற்றச்சாட்டு குறித்து அரசியலமைப்புச் சட்டம் 272-இன் கீழ் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.